அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை (17) முதல் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. ருவன் சத்குமார விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
நாளை (17) பி.ப. 4.00 மணி முதல் மத்திய தபால் பரிமாற்றக நடவடிக்கைகளிலிருந்தும், நாளை நள்ளிரவு 12.00 மணி முதல் நாடு முழுவதிலுமுள்ள தபால் நிலையங்களிலும் நிர்வாக அலுவலகங்களிலும் நடவடிக்கைகளிலிருந்தும் தொடர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
அதற்கமைய 19 கோரிக்கைகளை முன்வைத்துள்ள அவர்களது தொழிற்சங்க நடவடிக்கையின் அடிப்படையில், அவர்கள் வலியுறுத்தும் பிரதான கோரிக்கைகளை ஏற்க முடியாதவை என தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார தெரிவித்துள்ளார்.
இந்த வேலைநிறுத்தத்தில் முன்வைக்கப்பட்ட பிரதான விடயங்களாக, அரசின் சுற்றறிக்கை இல. 10/2025 இற்கு அமைய மேலதிக நேர (Overtime) கொடுப்பனவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு; தபால் திணைக்களத்தின் அனைத்து நிர்வாக அலுவலகங்கள் மற்றும் கணக்கு அலுவலகங்களில் கைவிரல் அடையாள (Biometric) பதிவு முறையை கட்டாயப்படுத்திய தீர்மானத்திற்கு எதிர்ப்பு ஆகியன உள்ளடங்குகின்றன.
ஆயினும் அரசாங்க சுற்றறிக்கை இல. 10/2025 இற்கு அமைய 2025 ஏப்ரல் 01ஆம் திகதியிலிருந்து புதிய சம்பள உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஏற்கனவே ஊழியர்களுக்கு சுமார் 40% வரை மேலதிக நேர கொடுப்பனவுகள், மேலதிகநேர ஊதியத்துடன் 25% முதல் 50% வரை போனஸ் நேர ஊதியம் உள்ளடக்கப்பட்டு கணக்கிடப்படுவதால், எந்தவொரு ஊழியருக்கும் இதனால் பாதிப்பு இல்லை என தபால்மா அதிப் குறிப்பிட்டுள்ளார்.
தபால் திணைக்களம் நாடு முழுவதும் நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில், இந்த வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது தபால் திணைக்களச் செலவின் 90% சம்பளங்களுக்கும் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கும் பயன்படுத்தப்படும் நிலையில், அரசாங்க வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டு கணக்காய்வு அறிக்கைக்கு மாற்றமாக செயற்பட முடியாது எனவும் தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டினார்.
ஆயினும் நாடு முழுவதும் 3,354 தபால் மற்றும் உப தபால் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லையென அறிவித்துள்ளனர். எனவே இயல்பான சேவைகளை தபால் நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியுமென குறிப்பிட்ட அவர், இருப்பினும் பொருட்கள் விநியோகம் தாமதமடையக்கூடும் எனவும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment