விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று வெள்ளிக்கிழமை (01) காலை உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சமிந்த அதுக்கோரல, சந்தேகநபர் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக எந்த முறைப்பாடும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, சந்தேகநபர் தகுந்த நிபந்தனைகளின் பேரில் பிணை கோரினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை ரூ. 50,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்தார்.
அத்தோடு, வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது.
பின்னர், இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.
2015 ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ரூ. 2.5 கோடி பெறுமதியுள்ள சோள விதைகளை, தமது ஆதரவாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் கீழ் ஜூன் 04ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டு, ஓகஸ்ட் 1 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment