கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு : 68 பேர் பலி, மேலும் 74 பேரை காணவில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, August 4, 2025

கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு : 68 பேர் பலி, மேலும் 74 பேரை காணவில்லை

யெமனின் அப்யான் மாகாண கடற்பரப்பில் எத்தியோப்பிய அகதிகள் மற்றும் குடியேறிகள் பயணித்த கப்பல் கவிழ்ந்ததில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 74 பேர் காணாமல் போயுள்ளதாகவும், சர்வதேச குடிபெயர்வுக்கான அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.

154 எத்தியோப்பிய குடியேறிகள் பயணித்த படகு ஒன்றே நேற்று (03) இவ்வாறு கவிழ்ந்ததாக ஐ.நா. குடிவரவு அமைப்பின் யெமன் பிராந்தியத் தலைவர் அப்துசத்தோர் எஸோவ் தெரிவித்தார். இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 54 பேரின் சடலங்கள் கான்ஃபார் மாவட்டத்தில் கரை ஒதுங்கியுள்ள நிலையில், 14 பேரின் சடலங்கள் மற்றுமொரு இடத்தில் மீட்கப்பட்டு வைத்தியசாலையின் பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் உடல்களை ஷகரா நகரம் அருகே அடக்கம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கடுமையான சூழ்நிலைகளின் மத்தியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்வதாகவும், சஞ்சிபார் நகரின் சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் அப்துல் காதிர் பஜமில் தெரிவித்துள்ளார்.

யெமன் மற்றும் ஆபிரிக்கா இடையேயான கடல் பாதை, அகதிகள் மற்றும் குடியேறிகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற மிகவும் ஆபத்தான பாதையாகக் கருதப்படுகிறது. 2014 இல் யெமனில் உள்நாட்டுப் போர் வெடித்ததையடுத்து, அந்த நாட்டிலிருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment