35 ஆவது வருட ஷுஹதாக்கள் தினமும், நீதியைக் கோரும் பாதிக்கப்பட்ட மக்களும் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 3, 2025

35 ஆவது வருட ஷுஹதாக்கள் தினமும், நீதியைக் கோரும் பாதிக்கப்பட்ட மக்களும்

1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறு இரத்­தத்தால் எழு­தப்­பட்ட ஆண்­டாகும். கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் புலிகளினால் படு­கொலை செய்­யப்­பட்­டதும் வட மாகாண முஸ்லிம்கள் புலி­களால் வெளி­யேற்­றப்­பட்­டதும் இந்த ஆண்­டில்தான்.

புலி­களின் ஆயுதப் போராட்­டம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் தோற்கடிக்கப்­படும் வரையும் விடு­தலைப் புலிகள் இயக்கம் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களை, அர­சியல்வாதி­களை, படு­கொலை செய்தல், கப்பம் அற­விடல், கடத்தல் உட்­பட முஸ்லிம் சமூ­கத்தின் வியா­பாரம், விவசாயம் மீது பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை விதித்தல் என்று தொடங்கி முஸ்லிம் இனச் சுத்­தி­க­ரிப்­புக்கு வழி­ச­மைக்கும் கூட்டுப் படு­கொ­லை­க­ளையும் அரங்­கேற்­றி­யது. 

அதே­போன்று முஸ்­லிம்­களின் சொத்­துக்­க­ளையும் பறி­முதல் செய்து சொந்த மண்னை விட்டும் பல­வந்­த­மாக வெளி­யேற்­றுதல் போன்ற நட­வ­டிக்­கைகள் 1990 இல் உச்ச கட்­டத்தை அடைந்­தன.

இவ்­வாறு வடக்கு கிழக்கு முழு­வதும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனச்­சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களின் உச்­ச­கட்­ட­மாக 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி காத்­தான்­கு­டியில் அமைந்­துள்ள மீராஜும்ஆ பள்­ளி­வாயல் மற்றும் ஹுசை­னியா பள்­ளி­வா­சல்­களில் இஷாத் தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த முஸ்­லிம்கள் மீது புலிகள் நடாத்­திய மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­த­லினால் 103 முஸ்லிம்கள் ­கொல்­லப்­பட்­டனர்.

புனி­த­மான இரண்டு பள்­ளி­வா­சல்­களில் தொழு­கையில் நின்ற 6 வயது சிறு­வன் முதல் 84 வயது முதி­யவர் வரை வயது வித்­தி­யா­ச­மின்றி 103 முஸ்­லிம்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர். 

இந்த சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்து இலங்கை விமானப்படையினரின் விமா­னத்தின் மூலம் அம்­பாறை மற்றும் கொழும்பு போன்ற இடங்­க­ளி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­வர்­களில் 21 பேர் பின்னர் உயிர் இழந்­தனர். 

பலர் உடம்­பில் ­குண்டுச் சன்­னங்­க­ளுடன் தற்­போதும் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் பலர் ஊன­முற்று வாழ்­கின்­றனர். இதில் பாதிக்கப்­பட்ட ஒவ்­வொரு குடும்­பத்­தின் பின்னாலும் ஒரு சோக வரலாறு இருக்­கின்­றது.

இத்தாக்­குதல் சம்­ப­வத்­தினால் இலங்கை முஸ்­லிம்கள் கவ­லையில் ஆழ்ந்­தி­ருந்தபோது சரி­யாக ஒரு வாரம் கழிந்த நிலையில் ஆகஸ்ட் 11 இல் இரவு உறக்­கத்தில் இருந்த ஏறாவூர் முஸ்­லிம்கள் மீதும் புலிகள் தாக்­கு­தல் நடத்­தினர். இச்­சம்­ப­வத்தில் 121 பேர் ஷஹீ­தாக்­கப்­பட்­டனர்.

இதேபோன்று காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை இடம் பெறுவதற்கு ஒரு­ மா­தத்­திற்கு முன்னர் புனித ஹஜ் கட­மை­யினை முடித்­துக்­கொண்டு தமது சொந்த ஊரான காத்­தான்­கு­டி நோக்கித் திரும்பிக் கொண்­டி­ருந்த நூற்­றுக்கு மேற்­பட்ட காத்­தான்­குடி ஹாஜிமார்­களும் அவர்­க­ளோடு வந்த உற­வி­னர்­களும் இன்னும் சில பொதுமக்­களும் விடு­தலைப் புலி­களால் மட்­டக்­க­ளப்பு மாவட்டத்திலுள்ள குருக்கள் மடத்தில் வைத்து கடத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­பட்­டனர்.

இதே காலப்­ப­கு­தியில் ஆகஸ்ட் 01 இல் அக்­க­ரைப்­பற்று நகரில் 8 முஸ்லிம்கள் படு­கொலை செய்யப்­பட்­டனர். ஆகஸ்ட் 05 இல் அம்பாறை முள்­ளி­யங்­காட்டில் 17 முஸ்­லிம்­ வி­வ­சா­யிகள் படு­கொலை செய்யப்­பட்­டனர். ஆகஸ்ட் 06 இல் அம்­பா­றையில் 33 முஸ்லிம் விவசாயிகள் படு­கொலை செய்யப்­பட்­டனர். இதே தினத்தில் சம்மாந்து­றையில் 04 முஸ்லிம் விவ­சா­யிகள் படு­கொலை செய்யப்பட்டனர். இவ்­வாறு பட்­டியல் நீண்டு செல்­கின்­றது.

இவ்­வாறு இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்கு பேர­வலம் ஏற்­பட்ட 1990 ஆம் ஆண்டின் கொடிய நினை­வு­களின் மைய­மாக ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்­லிம்கள் ஷுஹ­தாக்கள் தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தி ஒவ்­வொரு ஆண்டும் நினை­வு­கூர்ந்து வருகின்றனர். 

இத்­தி­னத்தை நினை­வு­கூரும் வகையில் வரு­டாந்தம் பள்­ளி­வாசல் படு­கொலை இடம்­பெற்ற காத்­தான்­குடி மீரா­ பள்ளிவாச­லிலும் ஹுசை­னியா பள்­ளி­வா­ச­லிலும் கத்­தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிரார்த்­தனை நிகழ்­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றமை குறிப்பிடத்தக்கது.

2004 ஆம் ஆண்டு நடை­பெற்ற சுஹ­தாக்கள் தினத்தின்போது காத்தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை மற்றும் ஏறாவூர் அழிஞ்சிப் பொத்­தானை இனச்­ சுத்­தி­க­ரிப்பு அக்­க­ரைப்­பற்று வயல் படு­கொலை உட்­பட இவ்­வாறு முஸ்­லிம்கள் மீதான படு­கொ­லை­களின்போது கொல்­லப்­பட்­ட­வர்­களின் நினை­வாக இத்தினத்தை தேசிய சுஹதாக்கள் தின­மாக சுஹ­தாக்கள் ஞாப­கார்த்த நிறு­வனம் பிரகடனப்­ப­டுத்தியது.

இவ்­வ­ளவு இழப்­புக்­க­ளையும் இழந்து நிற்­கின்ற முஸ்லிம் சமூ­கத்தின் தனித்­துவம் அங்­கீ­க­ரிக்­கப்­படல் வேண்டும். முஸ்­லிம்­களின் நியாயபூர்­வ­மான கோரிக்­கைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­படல் வேண்டும். வடக்கு கிழக்கு இனப்­ பி­ரச்­சி­னைக்கு முன்­வைக்­கப்­ப­டு­கின்ற தீர்வுத் திட்­டங்கள் முஸ்லிம் சமூ­கத்தை பாதிப்­பதாய் அமைந்­து­விடக் கூடாது. 

சகோ­தர தமிழ் மக்­களின் தியா­க­மிக்க இழப்­பு­க­ளுக்கு நியாயபூர்வமான தீர்வு கிடைக்­கின்ற அதேநேரம் அத்­தீர்­வு­களும் தீர்மா­னங்­களும் முஸ்­லிம்­களை அடக்­கு­மு­றைக்கு உட்­ப­டுத்­தி­ விடக்கூடாது என்­பதே முஸ்­லிம்­களின் கோரிக்­கை­யாகும்.

குருக்கள்மடத்தில் கொலை­ செய்­யப்­பட்­ட­வர்­களின் உடல் எச்சங்களை எடுத்து இஸ்­லா­மிய முறைப்­படி நல்­ல­டக்கம் செய்ய வேண்டும் என கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் கடந்த பத்து வருடங்­க­ளாக அவ்­வப்­போது ஆட்­சியில் இருக்கும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வரு­கின்­றனர். அவர்­களின் கோரிக்­கை­யினை ஆட்­சி­யா­ளர்கள் கவ­னத்தில் கொள்­ள ­வேண்டும். 

இச்­சம்­ப­வத்தில் ஈடு­பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இதுவரை இந்த சம்பவங்களுக்கு உரிய நீதி கிடைக்காத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இனப் பிரச்சினையின் பேரால் அநியாயமாக இழந்தவைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இழந்த உயிர்கள் மீளத் திரும்பாதபோதிலும் அவர்களது குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் நீதியும் நியாயமும் நிலை நாட்டப்படல் வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் இருப்பிற்காக தமது உயிர்களை நீத்த சுஹதாக்களின் சுவன வாழ்வுக்காகவும் அவர்களை இழந்து தவிக்கும் உறவுகளின் நல்வாழ்வுக்காகவும் இந்த நாட்களில் பிரார்த்திப்போம்.

Vidivelli

No comments:

Post a Comment