(இராஜதுரை ஹஷான்)
இலங்கையின் உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றது. நாட்டின் அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை விஜயத்தின்போது உள்ளக பொறிமுறை தொடர்பான விசாரணைகள் குறித்து சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொண்டார். அவரது வருகையின் அவதானிப்புக்கள் செப்டெம்பர் மாத கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு சாதகமாக அமையும் என்று வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தனியார் ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வருகை 2022 ஆம் ஆண்டு இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் கடந்த செப்டெம்பர் மாதம் ஆட்சிக்கு வந்தபோது அந்த யோசனை முன்னகர்த்தப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா, கனடா உட்பட ஒருசில நாடுகள் ஒன்றிணைந்து இலங்கை தொடர்பான இந்த பிரேரணையை முன்வைத்துள்ளன.
ஆட்சிக்கு வந்தவுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் எமது நிலைப்பாடு மற்றும் கொள்கைகளை தெளிவாக எடுத்துரைத்தோம். உள்ளக பொறிமுறை ஊடாக பொறுப்புக்கூறலை பலப்படுத்த காலவகாசம் தேவை என்பதை வலியுறுத்தினோம்.
இலங்கையின் தற்போதைய மாற்றங்கள் குறித்து நேரடியாக ஆராயுமாறு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தினோம். இதற்கமைவாகவே உயர்ஸ்தானிகர் அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
ஆட்சியியல் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் புதிய அரசியல் அபிலாஷைகள் குறித்து உயர்ஸ்தானிகர் நேரடியாகவே கண்காணித்தார். ஆகவே இந்த அவதானிப்புக்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு சாதகமாக அமையும்.
இலங்கையின் உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றது. நாட்டின் அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொருளாதார பாதிப்பினால் ஏற்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மனித உரிமைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானங்களை உயர்ஸ்தானிகருக்கு வெளிப்படையாக குறிப்பிட்டோம். எதனையும் நாங்கள் மறைக்கவில்லை.
வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டுள்ளோம். உள்ளக பொறிமுறை குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சிறந்த அனுபவத்தை பெற்றிருப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இது இலங்கைக்கு சாதகமாக அமையும்.
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் நீக்கம் பயங்கரவாத தடைச் சட்டம் 1978 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக கொண்டு வரப்பட்டபோது அதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். இன்றும் அதே நிலைப்பாட்டில் உள்ளோம். பயங்கரவாத தடைச் சட்டத்தால் ஏற்படும் விளைவை நாங்கள் முன்கூட்டியதாகவே அறிந்திருந்தோம்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதார மறுசீரமைப்பு குறித்து அதீத கவனம் செலுத்த வேண்டிய தேவை காணப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் விதப்புரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி ஹர்ஸகுலரத்ன தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பாதாளக் குழுக்களின் செயற்பாடு மற்றும் போதைப் பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் போதுமானதாக இல்லை. புதிய சட்டம் இயற்ற வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும்போது அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில விடயங்கள் புதிய சட்டவரைபுக்குள் உள்வாங்கப்பட வேண்டும். பாதாள குழுக்களுக்கு எதிராக செயற்படுவதற்காகவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஒருசில பிரிவுகள் புதிய சட்டத்துக்குள் உள்வாங்கும் தேவை காணப்படுகிறது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையை கொண்டுவருவதாக கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு அறிவித்துள்ளன.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்து புதிய சட்டவரைவு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரமளவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தலில் சட்டமூலம் பிரசுரிக்கப்படும். இந்த இலக்குடன் தற்போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு சற்று காலவகாசம் தேவை. சிவில் மற்றும் ஊடக தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இந்த சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த சட்டத்தையும் இரத்துச் செய்வோம் என்றார்.
No comments:
Post a Comment