மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன் வரவேண்டும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் 12.07.1990 ம் ஆண்டு ஹஜ் கடமையை முடித்துக் கொண்டு வந்த முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் இன்னும் சில முஸ்லிம் சகோதரர்கள் குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.
இதில் அதிகமான முஸ்லிம்கள் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். இதில் 167 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இன்னும் அவர்களின் ஜனாஸாக்கள் தோண்டப்படவில்லை.
தற்போது செம்மணி புதைகுழி தோண்டப்படுகிறது. இதேபோன்று குருக்கள் மடத்தில் புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் சடலங்களும் ஜனாஸாக்களும் தோண்டி எடுக்கப்பட்டு இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்படல் வேண்டும்.
இது தொடர்பாக நீதிமன்றம் சென்று தோண்டி எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை 2014 ஒக்டோபரில் பெற்ற போதிலும் இதுவரை தோண்டப்பட வில்லை.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மையாகும்.
எனவே குருக்கள் மடத்தில் கடத்தப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் ஜனாஸாக்களையும் தோண்டி எடுத்து இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டு கோள் விடுகிறேன் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மேலும் தெரிவித்துள்ளார்.
Vidivelli
No comments:
Post a Comment