கச்சதீவை இந்தியாவுக்கு வழங்க முடியாது : சர்வதேச சட்ட பிரகாரம் இலங்கைக்கே உரித்து - வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 5, 2025

கச்சதீவை இந்தியாவுக்கு வழங்க முடியாது : சர்வதேச சட்ட பிரகாரம் இலங்கைக்கே உரித்து - வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

இந்தியாவின் அரசியல் மேடைகளில் கச்சதீவு விவகாரம் தொடர்ச்சியாகவே பேசப்படுகிறது. அரசியல் மேடை பேசு பொருளாகவும் காணப்படுகிறது. சர்வதேச சட்டத்தின் பிரகாரமே கச்சதீவு இலங்கைக்கு உரித்தானது. ஆகவே கச்சதீவை எக்காரணிகளுக்காகவும் இந்தியாவுக்கு வழங்க முடியாது. கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் கச்சதீவு விவகாரம் குறித்து முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மத்திய அரசாங்கத்துடன் இவ்விடயம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தியாவின் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இந்த அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு இயலுமான வகையில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இந்தியாவின் அரசியல் மேடைகளில் கச்சதீவு விவகாரம் தொடர்ச்சியாகவே பேசப்படுகிறது. அரசியல் மேடை பேசு பொருளாகவும் காணப்படுகிறது.

இந்தியாவில் இந்திரா காந்தி ஆட்சியில்தான் கச்சதீவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தற்போது மோடியின் ஆட்சி உள்ளது. சர்வதேச சட்டத்தின் பிரகாரமே கச்சதீவு இலங்கைக்கு உரித்தாக்கப்பட்டது. எக்காரணிகளுக்காகவும் கச்சதீவை இந்தியாவுக்கு வழங்க முடியாது. அது இலங்கைக்குரிய தீவு.

இந்தியாவில் தேர்தல் காலத்தில் கச்சதீவு ஒரு விடயமாக பேசப்படும். இதனை நாங்களும் நன்கு அறிவோம். சட்ட ரீதியாகவும் இந்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முடியாது. இது இலங்கைக்கு சொந்தமான தீவு. இந்தியாவின் உள்ளக அரசியல் விவகாரத்தில் இந்த விடயம் தொடர்ச்சியாக பேசப்படுகிறது.

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்பதை தெளிவாக குறிப்பிட முடியும். கச்சதீவை நவீனமயப்படுத்த எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment