வைத்தியர்களுக்கான இடமாற்றத்தில் சீர்கேடு, பல அரச வைத்தியசாலைகள் முடங்க வாய்ப்பு - எச்சரித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 26, 2025

வைத்தியர்களுக்கான இடமாற்றத்தில் சீர்கேடு, பல அரச வைத்தியசாலைகள் முடங்க வாய்ப்பு - எச்சரித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(செ.சுபதர்ஷனி)

தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான பணியிடமாற்ற நடவடிக்கையில் நிலவி வரும் சீர்கேடு காரணமாக அரச வைத்தியசாலைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதுடன், இந்நிலைமை நீடிக்கும் பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் பல வைத்தியசாலைகள் முடங்க வாய்ப்புள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க எச்சரித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான பணியிடமாற்ற நடவடிக்கையில் நிலவி வரும் சீர்கேடு காரணமாக இந்த நாட்டின் அரச வைத்தியசாலைகளின் சுகாதார சேவை நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

நாடு முழுவதும் சுகாதார சேவையை உயர் தரத்தில் வழங்க அனைத்து அரச வைத்தியசாலைகளுக்கும் அவசியமான வைத்தியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். எனினும் நீண்ட காலமாக வைத்தியர்களுக்கான பணியிட மாற்றம் வழங்கப்படாமையால் பல வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை சேவைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

அந்த வகையில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் இந்த நாட்டில் உள்ளனர். அவர்கள் தற்போது கடும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுதே பணியாற்றி வருகின்றனர். இதனால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பல அரச வைத்தியசாலைகளின் சேவைகள் எதிர்வரும் நாட்களில் முடங்க வாய்ப்புள்ளது.

வரையறுக்கப்பட்ட பயிற்சியை நிறைவு செய்த 1977 வைத்தியர்களை உள்ளடக்கிய இரு குழு பணியிடமாற்றத்தை எதிர்பார்த்துள்ளதுடன், மேலும் 1494 வைத்தியர்கள் பயிற்சியை நிறைவு செய்து சுமார் 9 மாதங்களாக பண்டமாற்றத்திற்காக காத்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான இடமாற்ற பட்டியல் (9 மாதங்கள் பிறகு) 2025 ஜூலை 11 இல் தாமதமாகவே வெளியிடப்பட்டது. அதில் தவறுகள் உள்ளதுடன், பலருக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பின்புல அதிகாரம் மற்றும் கட்டுப்பாடுகளற்ற செயற்பாடுகள் காரணமாக சுகாதார சேவை நாளுக்குநாள் நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment