இஸ்ரேலின் திட்டத்தை 'வதை முகாம்' என விமர்சனம் : பலஸ்தீனர்களின் உயிரிழப்பு 58,000 ஐ தாண்டியது - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 15, 2025

இஸ்ரேலின் திட்டத்தை 'வதை முகாம்' என விமர்சனம் : பலஸ்தீனர்களின் உயிரிழப்பு 58,000 ஐ தாண்டியது

காசாவில் கடந்த 21 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கர தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் தெற்கு காசாவில் ‘மனிதாபிமான நகரம்’ ஒன்றை அமைக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு விமர்சனங்கள் வலுத்துள்ளன.

காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியாக கட்டார் தலைநகர் டோஹாவில் ஒரு வாரம் தாண்டி பேச்சுவார்த்தைகள் நீடித்தபோது இதுவரை குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

நேற்று காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் காசாவில் மேலும் 28 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் தண்ணீர் டாங்கர் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

காசா நகரின் வடக்கு பகுதியில் உள்ள அல் சப்தாவியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் நேற்று ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. அதேபோன்று கிழக்கு காசாவின் சுஜையா பகுதியில் இடம்பெற்ற பிறிதொரு தாக்குதலில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக அல் அஹ்வி அரபு வைத்தியசாலையை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

முந்தைய 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 95 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 58,026 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காசாவின் தெற்கு நகரான ரபாவில் கட்டடங்களை தகர்க்கும் நடவடிக்கை ஒன்றை இஸ்ரேல் முன்னெடுத்து வருவதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் நடத்திய விசாரணை ஒன்றில் மூலம் தெரியவந்துள்ளது.

தெற்கு காசாவில் 600,000 மக்களை மீளக் குடியமர்த்தும் திட்டம் ஒன்றை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் ஒட்டுமொத்த காசா மக்களையும் உள்வாங்கும் வகையில் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையொட்டி ரபா பகுதியில் இடிக்கப்பட்டிருக்கும் கட்டடங்ககளின் எண்ணிக்கை 2025 ஏப்ரல் 4 இல் 15,800 ஆக இருந்து 28,600 ஆக அதிகரித்திருப்பதாக செய்மதிப் படங்களை ஆய்வு செய்து நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்படி கடந்த ஏப்ரல் ஆரம்பம் தொடக்கம் ஜூலை ஆரம்பத்திற்கு இடையே சுமார் 12,800 கட்டடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன.இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடற்கரைப் பகுதியான அல் மவாசியில் வசிக்கும் முதல் 600,00 பலஸ்தீனர்கள் ரபாவுக்கு மாற்றப்படும் என்று குறிப்பிட்டார். இதனை பலஸ்தீனர்களுக்கான ‘மனிதாபிமான நகர்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. காட்ஸின் கூற்றுப்படி, காசாவில் உள்ள 2 மில்லியனுக்கு மேற்பட்ட ஒட்டுமொத்த மக்களும், இறுதியில் தெற்கு காசாவுக்கு இடமாற்றப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் நெதன்யாகுவின் இந்த ‘மனிதாபிமான நகர்’ திட்டத்திற்கு இரு முன்னணி இஸ்ரேலிய அரசியல்வாதிகள் கண்டம் வெளியிட்டுள்ளனர். இந்தத் திட்டம் பலஸ்தீனர்களை ‘வதை முகாம்’ ஒன்றில் அடைப்பதற்கு சமமானது என்று சாடியுள்ளனர்.

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர்களான யயிர் லபிட் மற்றும் எஹுட் ஒல்மார்ட் இருவருமே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவரான லபிட், இஸ்ரேல் இராணுவ வானொலிக்கு கூறும்போது, ரபா நகரை அழித்து ‘மனிதாபிமான நகரை’ நிறுவுவதற்கான திட்டத்தினால் எந்த நல்லதும் நடக்காது’ என்றார்.

‘பாதுகாப்பு, அரசியல், பொருளாதாரம், ஏற்பாட்டியல் என்று எந்த வகையிலும் இது ஒரு மோசமான திட்டம். மனிதாபிமான நகரை ஒரு வதை முகாமாக விபரிப்பதற்கு நான் விரும்பாதபோதும், அங்கே வெளியேறுவதற்கு தடை ஏற்பட்டால் அது ஒரு வதை முகாமாக இருக்கும்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதேபோன்று 2006 தொடக்கம் 2009 வரை இஸ்ரேலிய பிரதமராக இருந்த ஒல்மார்ட், இஸ்ரேலின் திட்டத்தை கடுமையாக சாடியுள்ளார். ‘என்னை மன்னியுங்கள், அது ஒரு வதை முகாமாக இருக்கும்’ என்று பிரிட்டனின் கார்டியன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். ‘அவர்கள் (பலஸ்தீனர்கள்) புதிய மனிதாபிமான நகருக்கு வெளியேற்றப்பட்டால், அதனை இனச் சுத்திகரிப்பின் ஓர் அங்கமாகக் குறிப்பிட முடியும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் காசாவில் இருந்து பலஸ்தீனர்களை இனச் சுத்திகரிப்புச் செய்யும் திட்டம் ஒன்றாக உள்ளது என்று பிரதான மனிதாபிமான அதிகாரிகளும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment