காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு வார சிசு உட்பட 15 பேர் பட்டினியால் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கும் நிலையில் கடந்த 21 மாதங்களாக நீடிக்கும் காசா போரில் முன் னெப்போதும் இல்லாத வகையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
வடக்கு காசாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே யூசப் அல் சபாதி என்ற அந்த சிசு உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்த மேலும் மூவர் சிறுவர்கள் என்பதோடு இவர்களில் 13 வயது அப்துல் ஹமீத் கல்பான் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளான்.
காசா போரில் இதுவரை பட்டினியால் குறைந்தது 101 பேர் மரணித்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 80 வீதமானவர்கள் சிறுவர்கள் என்பதோடு அவர்களிலும் பெரும்பாலானவர்கள் அண்மைய வாரங்களிலேயே உயிரிழந்துள்ளனர்.
காசாவுக்கான அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் கட்டுப்படுத்துவதோடு, அங்குள்ள அதிகப் பெரும்பான்மையான மக்கள் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பத்தியில் பல தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர். அங்கே அடிப்படைத் தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பட்டினி மற்றும் களைப்புக் காரணமாக மருத்துவர்கள், தன்னார்வ பணியாளர்கள் அதேபோன்று தமது ஊழியர்களும் வேலைக்கு மத்தியில் மயங்கி விழுவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் நேற்று குறிப்பிட்டுள்ளார்.
‘யாரும் தப்பவில்லை: காசாவில் உள்ள தொண்டுப் பணியாளர்கள் கூட பராமரிப்பை எதிர்கொண்டுள்ளனர். மருத்துவர்கள், தாதியர்கள், ஊடகவியாளர்கள் மற்றும் மனிதாபிமான உதவியாளர்களும் பட்டினியில் உள்ளனர்’ என்று மேற்படி ஐ.நா நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லசரினி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் கூட்டுப் படுகொலைகள் மற்றும் உதவிகளுக்கு இருக்கும் பெரும் தட்டுப்பாடு குறித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் வலுத்தபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அல்லது குறிப்பிடத்தக்க அளவில் உதவிகளின் அதிகரிப்பு ஏற்படவில்லை.
ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் உருசுல் வொன்டர் லெயென், உதவி விநியோகத்திற்கு மத்தியில் மக்கள் கொல்லப்படுவது தாங்க முடியாது இருப்பதாகவும் நிலைமையை மேம்படுத்த இஸ்ரேல் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எனினும் ஐரோப்பிய நாடுகள் எடுக்கும் நடவடிக்கை குறித்து அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. =’காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை மாற்றுவதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகக் கருதுவதாக’ இஸ்ரேலின் இராணுவம் கூறியது, மேலும் சர்வதேச சமூகத்துடன் ஒருங்கிணைந்து அதனை எளிதாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டது.
எனினும் காசாவுக்கு உதவிகள் செல்வதை தடுப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை அது மறுத்ததோடு பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் உணவுகளை திருடுவதாக குற்றம்சாட்டியபோதும் ஹமாஸ் அமைப்பு அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.
‘துப்பாக்கிச் சூடுகளால் பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்திருக்கும் நிலையில் மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பி வழிகின்றன. உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை இருக்கும் நிலையில் பட்டினி தொடர்பான அறிகுறிகளுக்கு உதவ முடியாதுள்ளது’ என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் கலீல் அல் தக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 600,000 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்படைந்திருப்பதாக சுட்டிக்காட்டி இருக்கும் தக்ரான், இவர்களில் குறைந்தது 60,000 கர்ப்பிணிப் பெண்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார். பட்டினியின் அறிகுறிகளாக நீர்ச்சத்து இழப்பு மற்றும் இரத்தக் குறைபாடுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை பால்மாவுக்கு குறிப்பிடத்தக்க அளவில் தட்டுப்பாடு நிலவுவதாக உதவிக் குழுக்கள், மருத்துவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களும் காசாவில் தொடர்ந்து நீடித்து வருகின்றன. நேற்றுக் காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 63 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார வட்டாரம் தெரிவித்தது.
இதில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவில் வழங்கப்படும் உதவியை பெறுவதற்காக காத்திருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளை நெருங்கும் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 59,106 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 142,511 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment