(எம்.ஆர்.எம். வசீம்)
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க எமது ஆதரவு தேவைப்படும் கட்சிகளுடன் கலந்துரையாட நாங்கள் தயாராக இருக்கிறோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், முதலில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் மக்கள் ஆளும் கட்சிக்கு ஒரு செய்தியைக் கொடுத்துள்ளனர்.
அதேபோன்று இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளன. அரசாங்கம் சொன்ன பொய்களை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர் என்பதை இது நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
இந்த தேர்தல் முடிவின் மூலம், சில உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதற்கு எங்கள் ஆதரவு தேவைப்படும் என்று நாங்கள் நினைக்கிறோம். எனவே, எதிர்காலத்தில் எந்தவொரு கட்சியுடனும், அது ஐக்கிய மக்கள் சக்தி அல்லது வேறு எந்தக் கட்சியுடனும் கலந்துரையாட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment