தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கைதான இரண்டு பெண்களுக்கும் ஜூன் 05ஆம் திகதி வரை விளக்கமறியல் வழங்குமாறும் பதில் நீதவான் தரங்க டி சில்வா உத்தரவிட்டார்.
இன்று (24) கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான துமிந்த திசாநாயக்க கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு திம்பிரிகஸ்யாயவிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
வெள்ளவத்தையில் உள்ள ஹெவ்லொக் சிட்டி வீட்டு வளாகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்தே இவர் கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்க முலாம் பூசப்பட்ட இந்தத் துப்பாக்கி கொழும்பிலுள்ள வீட்டு வளாகத்தில் வசிக்கும் பெண்ணிடமிருந்து மீட்கப்பட்டது.
இது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் 69 வயதான பெண்ணையும், அவரது மருமகளையும் விசாரித்தனர். மேலும் இவர்கள் இந்த ஆயுதம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பொலிஸாரிடம் கூறினர். பின்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவால் இவர்கள் மீது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போதே முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க இந்த தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்தது.
சந்தேகநபரான முன்னாள் அமைச்சர், ஆறு மாதங்களுக்கு முன்பு தமது சமையல்காரர் மூலம் தோழி ஒருவரின் வீட்டிற்கு இந்த துப்பாக்கியை அனுப்பியதாக பொலிஸாருக்கு தெரிய வந்தது.
ஆயுதம் அடங்கிய அந்தப் பையில் T-56 துப்பாக்கி இருப்பதை அறியாமலேயே அப்பெண் அதை ஏற்றுக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment