அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தும் பொறுப்பினை சரியானவர்களிடம் கொடுங்கள் : ஆட்சியமைப்பதில் நாங்கள் பரஸ்பரமாக கலந்தாலோசித்து செயற்பட வேண்டியுள்ளது - சிறிநேசன் எம்.பி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 8, 2025

அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தும் பொறுப்பினை சரியானவர்களிடம் கொடுங்கள் : ஆட்சியமைப்பதில் நாங்கள் பரஸ்பரமாக கலந்தாலோசித்து செயற்பட வேண்டியுள்ளது - சிறிநேசன் எம்.பி தெரிவிப்பு

விமர்சனங்களோடு மாத்திரம் நின்றுவிடாமல் எமது பிரதேசங்களில் அபிவிருத்தி குன்றிக் காணப்படுகின்ற இடங்களில் கல்விசார் அபிவிருத்திகள், பௌதிக வளம் சார்ந்த செயற்பாடுகள் போன்றவற்றை முன்னெடுக்குமிடத்தில் அதற்கான பொறுப்பினை சரியானவர்களிடம் கொடுக்கின்றபோது, அவர்கள் வீண்விரயம் இன்றி அபிவிருத்திப் பணிகளை அந்தந்த பிரதேசங்களில் செய்வர் என்பதை புலம்பெயர் மக்களிடம் நான் கூறிக்கொள்கிறேன் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (7) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், மட்டக்களப்பில் காணப்படுகின்ற 12 உள்ளூராட்சி சபைகளில் 9 சபைகள் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களாக காணப்படுகின்றன. 3 உள்ளூராட்சி சபைகள் சகோதர முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற சபைகளாக காணப்படுகின்றன.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற உள்ளூராட்சி சபைகளில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், தமிழ் அரசு கட்சி ஆட்சியமைக்கக்கூடிய நிலைமை காணப்படுகிறது.

சர்ச்சைக்குரிய இந்த பிரதிநிதித்துவ முறையின் கீழ் வட்டார முறை தேர்வு, விகிதாசார தேர்வு, அத்தோடு தொங்கு நிலையான நிலைமையும் சில இடங்களில் காணப்படுகின்றன.

வவுணதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள 10 வட்டாரங்களையும் தமிழ் அரசு கட்சி வென்றுள்ளது. அதேபோன்று வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள 10 தமிழ் வட்டாரங்களையும் இலங்கை தமிழ் அரசு கட்சி வென்றுள்ளது.

செங்கலடி பிரதேசத்தில் காணப்படுகின்ற 14 வட்டாரங்களில் 13 வட்டாரங்களை எமது கட்சி வெற்றி கொண்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையில் 20 வட்டாரங்களில் 16 வட்டாரங்களை எமது கட்சி வென்றுள்ளது.

மண்முனை பற்று பிரதேசத்தில் தமிழ் மக்கள் வாழ்கின்ற 8 வட்டாரங்களில் 6 வட்டாரங்களை எமது கட்சி வென்று வெற்றிவாகை சூடியுள்ளது.

அதேபோன்று பத்துக்கு ஏழு, பத்து எட்டு, பத்துக்கு ஆறு, பத்து ஐந்து என்ற அடிப்படையில் எமது கட்சி ஏனைய உள்ளூராட்சி சபைகளில் வெற்றிவாகை சூடியிருக்கின்றன.

ஒட்டு மொத்தமாக பார்க்கிறபோது மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் அரசு கட்சி முன்னிலையில் காணப்படுகிறது. அதுபோன்று அதிகளவான ஆசனங்களை மட்டக்களப்பில் தமிழ் அரசு கட்சி பெற்றிருக்கிறது. எனவே, ஒட்டு மொத்தமாக பார்க்கிறபோது நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் அரசு கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

அதுபோன்று யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாறை போன்ற பிரதேசங்களிலும் எமது தமிழ் அரசு கட்சி அதிகளவான ஆசனங்களை பெற்றிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திசைகாட்டி சின்னம் ஒரு ஆசனத்தையும் எமது கட்சி மூன்று ஆசனங்களையும் பெற்றிருந்தது. ஆனாலும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெருவாரியான ஆசனங்களை பெற்றிருக்கவில்லை. பட்டியலுக்கு ஊடாகவும், சில வட்டாரங்களுக்கூடாகவும் மாத்திரம் ஒரு சில ஆசனங்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளன. அதேபோன்று தென்னிலங்கை கட்சியாக காணப்படுகின்ற ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன போன்ற பல கட்சிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெறவில்லை.

எனவே, பாராளுமன்றத்திலும் எமது மாவட்ட மக்கள் தமிழ் அரசுக் கட்சியை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அதுபோல் உள்ளூராட்சி மன்றத்திலும் எமது மக்கள் நமது கட்சியை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

எமது கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனேகமாக வெற்றி பெற்றிருக்கிறார். ஆனாலும் ஒரு சில இடங்களில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேட்பாளரின் தெரிவின்போது மிக கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது. வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறார்கள், மக்கள் வாக்குகளில் எவ்வளவு தூரம் அவர்கள் செயற்படுகிறார்கள் என்பது தொடர்பில் வேட்பாளர்களில் கவனம் செலுத்தி தேர்வு செய்கின்றபோது நாம் சுமுகமான வெற்றிகளை பெறமுடியும்.

கற்றுக்கொண்ட படிப்பினைகளை இனிவரும் தேர்தல்களில் நாங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். சில வட்டாரங்களில் எமது கட்சியினர் தோல்வியடைந்திருக்கிறார்கள். அவ்வாறான வேட்பாளர்கள் எதிர்காலத்தில் மிகவும் உன்னிப்பாக அடையாளம் காணப்பட்டு சரியான வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆளும் கட்சியாக இருக்கின்ற கட்சிகள் எப்போதும் தங்களுடைய அதிகார பலத்தினாலும், அதில் வரும் அபிவிருத்தி எனப்படுகின்ற மாயையூடாகவும், வருகின்ற மாகாண சபைத் தேர்தல் செல்வாக்கு செலுத்துவதற்கு அவர்கள் முற்படுகிறார்கள்.

தமது கட்சி அதிகாரத்தை பெற்றால் கண்ணை மூடிக்கொண்டு அபிவிருத்திக்கான நிதிகளை அனுப்ப முடியும் என தற்போது ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். அவ்வாறான சில போதனைகள் காணப்படுகின்ற காரணத்தினால் உரிமை சார்ந்த அரசியலில் அக்கறையினமாக காணப்படுகின்ற சிலர் ஒரு சில வட்டாரங்களில் தேசிய மக்கள் சக்தியை வெற்றி கொள்ளச் செய்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியினருக்கு இவ்வாறான ஒரு சில வட்டாரங்கள் சாதகமாக அமைந்திருக்கின்றன.

விமர்சனங்களோடு மாத்திரம் நின்றுவிடாமல் எமது பிரதேசங்களில் அபிவிருத்தி குன்றி காணப்படுகின்ற இடங்களில் கல்விசார் அபிவிருத்திகள், பௌதிக வளம் சார்ந்த செயற்பாடுகள் போன்றவற்றை முன்னெடுக்குமிடத்தில், அதற்கான பொறுப்பினை சரியானவர்களிடம் கொடுக்கின்றபோது அவர்கள் வீண்விரயமின்றி அந்தந்த பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பதை நான் இச்சந்தர்ப்பத்தில் புலம்பெயர் மக்களிடம் கூறிக்கொள்கிறேன்.

குடிநீர் வழங்குதல், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான படிப்பகங்களை அமைத்தல், பாடசாலைகளுக்கு உதவி செய்தல், சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்களுக்கும் புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற எமது உறவுகள் உதவிகளை செய்யும் பட்சத்தில் எமது சமூகத்தை மேலும் துரிதமாக வளர்த்துக்கொள்வதற்கு உரியதொரு பங்களிப்பாக இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது இலங்கை தமிழ் அரசு கட்சி ஏனைய கட்சிகளிலிருந்து வித்தியாசமாக செயற்படுவதில் பல பண்புகள் காணப்படுகின்றன. அந்த விதத்தில் ஊழல், மோசடி, இலஞ்சம், வீண்விரயம், இல்லாமல் பிரதேச சபைகளை வழிநடத்தக் கூடியவர்களாக இருப்பவர்களை நாம் தவிசாளர், உப தவிசாளர் பதவிகளுக்கு தெரிவு செய்வதென சிந்தித்திருக்கிறோம். இதைவிட ஏனைய சபைகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் செயற்படக் கூடியவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். அவ்வாறானவர்கள் சுயநலம் குறைந்தவர்களாகவும் பொதுநலத்தில் அதிக அக்கறை காட்டக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அதேபோன்று ஏனைய சக உறுப்பினர்களையும் அரவணைத்துக்கொண்டு பக்குவமாக செயற்படக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.

உள்நாட்டு நிதியையும் புலம்பெயர் மக்களின் நிதியையும் பெற்றுக்கொண்டு, அந்த மக்களுக்காக அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடக்கூடிய ஆளுமை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

குறிப்பாக, தவிசாளர்களாக நியமிக்கப்படுபவர்கள் தங்களது பதவிக் காலத்தின்போது அர்ப்பணிப்புடன் பணியாற்றி தங்களுடைய பிரதேச சபையை ஒரு முன்மாதிரியான பிரதேச சபையாக மாற்றக்கூடியவர்களாகவும் தங்களுக்கு கிடைத்திருக்கின்ற அதிகாரம், நிதி, பலம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு அபிவிருத்தி பணிகளை செய்து ஒரு மாறாத இடத்தை பிடிக்கக்கூடிய தலைவர்களாக விளங்க வேண்டும். அவர்கள் ஏனைய காட்சிகளைப் போன்று அல்லாமல் ஆளுமை உள்ள தலைவர்களாக செயற்பட வேண்டும்.

எனினும், எம்மால் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்நிலையில் நாங்கள் தமிழ் தேசிய கட்சியாக இருப்பதனால் அதிகபட்சம் தமிழ் தேசியக் கொள்கை சார்ந்து செயற்படக்கூடியவர்களுடன் நாம் உடன்பட்டு செயற்படுவது நல்லது. அதேவேளை சில கட்சிகளுக்கும் சில பிரதேச சபைகளில் எங்களுடைய உதவிகளும் தேவைப்படுகின்றன.

அதேபோன்று எங்களுடைய கட்சியின் உதவிகளும், ஒரு சில கட்சிகளுக்கு, ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவைப்படுகின்றன.

இந்நிலையில், பரஸ்பரம் நாங்கள் கலந்தாலோசித்து செயற்பட வேண்டியுள்ளது. சில சபைகளில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் தமிழ் அரசு கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது. தமிழ் மக்கள் செறிவாக உள்ள பிரதேச சபைகளில் முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, இவ்விடத்தில் பரஸ்பரமும் இரு பக்கங்களும் ஆராய்ந்து செயற்படக்கூடிய தன்மையும் வேண்டும்.

மிகவும் பேரினவாத கட்சியாக காணப்படுகின்ற அல்லது அவர்களுக்கு அடிவருடிகளாக இருப்பவர்களுடன் சேர்ந்து செயற்படுவதில் நாங்கள் அக்கறை காட்டவில்லை. எனவே, நாங்கள் தமிழ் தேசியத்துடன் பயணிக்கின்ற கட்சிகளுடன் இணைந்து, அவர்களது ஒத்துழைப்புடன் செயற்படவே நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment