முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அனுப்பப்பட்ட அழைப்பாணை ஆவணங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்குத் தெரிந்திருப்பதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானவை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர், ”ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தான் அழைக்கப்பட்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க, ஏப்ரல் 11 ஆம் திகதி சமூக ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்தினார்.
அன்றையதினம் தான் கொழும்பில் இல்லாமையினால், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜாராவதற்காக வேறொரு தினம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
இதன் மூலமே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தத் தகவலை பெற்றிருக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தான் முன்பு கூறியதை மறந்து இவ்வாறு தெரிவித்திருக்கலாம்.
சிலர் கூறுவதைபோன்று, இந்த விடயங்கள் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்குத் தெரிவிக்கப்படவில்லை” என அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏ.கே.எம்.பிள்ளை
No comments:
Post a Comment