ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இரு வேட்பாளர்கள் உட்பட ஆதரவாளர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 15, 2025

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இரு வேட்பாளர்கள் உட்பட ஆதரவாளர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காரைதீவு பிரதேச சபை மூலமாக மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களான ஜே.எம்.ஹசன் மற்றும் என்.எம்.நப்ரின் ஆகிய இருவர் உட்பட அவர்களது ஆதரவாளர்களும் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டனர்.

இரு வேட்பாளர்கள் உட்பட அவர்களது இளைஞர் படையணி ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து, எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து தேசிய மக்கள் சக்தியுடனே எங்களது பயணம் அமையும் என்றும் உறுதிமொழி கூறி, அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் திகாமடுல்ல மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்திப் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவாவுடன் ஞாயிற்றுக்கிழமை இணைந்து கொண்டனர்.

வாயால் வடை சுடாமல், பொதுமக்களின் நலன்கருதி, சிறந்த சேவையாற்றிவரும் தேசிய மக்கள் சக்தியே உண்மையான கட்சி என்றும் முஸ்லிம் மக்களுடைய அபிலாஷைகளை முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல், முஸ்லிம்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு ஏற்ற வசதி வாய்ப்பளித்து, இதுவரை எந்த அரசாங்கமும் வழங்காத சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கின்ற கட்சி என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், மிகச் சிறந்த தலைவர் என்றும், நீதியின் பக்கமே அவர் தலை சாய்ப்பவர். யாருக்கும் அஞ்சாதவர். குற்றம் யார் செய்தாலும் இன, மதம், மொழி கடந்து சட்டத்தை நிலைநாட்டுவதில் குறியாய் இருப்பவர்.

அப்படிப்பட்ட சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்ட கட்சியான தேசிய மக்கள் சக்தியுடனும் பொதுமக்களின் நன்மைக்காகவே தன்னலம் பாராது சேவையாற்றிவரும் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவுடனும் நான் உட்பட எனது சக வேட்பாளர் மற்றும் எமது ஆதரவாளர்கள் இணைந்து பயணிக்க மனப்பூர்வமான விருப்பத்துடன், அவரது கரங்களைக் பலப்படுத்தவுள்ளோம்.

இனிவரும் காலங்களில் எமது செயற்பாடுகள் தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சிக்காகவே அமையும் என்றும் அதற்காகவே ஒருமித்து பாடுபடுவோம் என்றும் இணைந்து கொண்ட வேட்பாளர்கள் இதன்போது கருத்து தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அரசில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழாவிட்டால் வேறு எந்த அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள் தெரிவித்து வருகின்ற கருத்து முற்றிலும் உண்மையானது. அவரது அந்த கருத்தே எம்மை இக்கட்சியில் இணைந்து கொள்வதற்கு முற்றுமுழுதான காரண கர்த்தாவாக அமைந்தது என்றும் தெரிவித்தனர்.

எம்மோடு இணைந்து செயற்படுபவர்கள் யாராக இருந்தாலும் வாருங்கள் கைகோர்த்து செயற்படுவோம். உங்களை வரவேற்க, உங்களை அரவணைத்துச் செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம். "இத்தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி வேட்பாளருக்கே வாக்களிப்போம்" என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கரங்களை எப்போதும் பலப்படுத்துவோம் என்றும் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா இதன்போது கருத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment