கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ரூ. 230 மில்லியன் (ரூ. 23 கோடி) மதிப்புள்ள ‘குஷ்’ (Kush) போதைப் பொருளுடன் அமெரிக்க பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் கிடைத்த தகவலின்படி, 31 வயதுடைய அமெரிக்க பிரஜை ஒருவரே கைதாகியுள்ளார். அவர் அமெரிக்காவில் செயற்படும் ரியல் எஸ்டேட் நிறுவனமொன்றில் பணியாற்றுபவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பயணி, நேற்று (15) முற்பகல் 10.15 மணியளவில், தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து ஶ்ரீ லங்ன் எயார்லைன்ஸின் UL-403 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பின்னர் வர்த்தகர்களுக்குரிய Red Channel ஊடாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோதே, சந்தேகத்தின் பேரில் அவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவரது பயணப்பைகளில் 1 கிலோகிராம் எடையிலான 23 பொதிகளில் மொத்தமான 23 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருள், மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைபொளை, சுங்க ஆணையாளர் நாயகம் சரத் நோனிஸ் மற்றும் மேலதிக பணிப்பாளர் நாயகமும் சுங்க ஊடகப் பேச்சாளருமான சீவலி அருக்கொட நேரில் பார்வையிட்டனர்.
தாய்லாந்தில் தற்போது ‘குஷ்’ எனும் போதைப்பொருளின் பயன்பாடு சட்டபூர்வமாக்கப்பட்டிருப்பதால், அவ்வாறான போதைப்பொருட்கள் அந்நாட்டின் சந்தையில் இலகுவாக கிடைப்பதால், தற்போது அவை இலங்கைக்கு கடத்தப்படும் வீதம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
No comments:
Post a Comment