நாட்டில் எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் கிடையாது என ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும், இதனால் மக்கள் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென ஏற்பட்டுள்ள வரிசை நிலைமை தொடர்பாக, நேற்றைய (01) பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக சபையில் மேலும் தெரிவித்த அமைச்சர், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளிலிருந்து விநியோகஸ்தர்கள் விலகிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட செய்தியை தொடர்ந்து நாட்டில் நேற்று (நேற்றுமுன்தினம் 28) இரவு சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்கள் வரிசையில் காணப்பட்டன.
ஆனால், எரிபொருள் விநியோக நடவடிக்கையில் எந்த குறைபாடும் இடம்பெறவில்லை. தற்போது வரை 19 மில்லியன் லீற்றர் எரிபொருள் கொள்வனவு கட்டளை விநியோகஸ்த்தர்களால் மேற்கொள்ளகப்பட்டிருக்கின்றது. இது வழமையாக மேற்கொள்ளப்படும் கொள்வனவு கட்டளையை விட அதிகமாகும்.
பொதுவாக காலை 6 மணிக்கு பின்னர் கொள்வனவு கட்டளைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. என்றாலும் நேற்று (நேற்று முன்தினம் 28) இடம்பெற்ற பிரச்சினையால் மக்கள் அதிகமாக எரிபொருள் கொள்வனவு செய்ததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.
தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு தீர்வாக எரிபொருள் கட்டளைகளை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
அதேபோன்று மாலையாகும்போது இது தொடர்பாக மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமையும் எரிபொருள் கட்டளைகளை ஏற்றுக் கொள்ள தீர்மானித்திருக்கின்றோம்.
அதனால் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. எனவே, வரிசைகளில் இருந்து தங்களின் வாகனங்களுக்கு மேலதிகமாக எரிபொருளை நிரப்புவதில் அர்த்தமில்லை.
நாட்டில் தேவையான அளவு எரிபொருள் கைவசம் இருக்கின்றது. அதேபோன்று சிபெட்கோ நிறுவனமும் விநியோக நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
என்றாலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பவர்களில் ஒரு சிலரே பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனையோர் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் தேவையில்லாமல் பதற்றப்பட தேவையில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment