(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பொலிஸ் ஆணைக்குழுவுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏதும் கிடையாது. அரசியல் தலையீடுகளில் இருந்து பொலிஸ் சேவை விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 680 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, பொலிஸ் சேவை சுயாதீனமாகவே செயற்படுகிறது. அரசியல் தலையீடுகள் ஏதுமில்லாமல் பொலிஸார் தற்போது சுயாதீனமான முறையில் செயற்படுகின்றனர். பொலிஸ் சேவையை வினைத்திறனான முறையில் செயற்படுவதற்கு தேவையான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன '184 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமனத்தில் 182 நியமனங்கள் அரசியல் பரிந்துரை' என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான நிலைமை தற்போது கிடையாது.
ஆகவே பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன்தான் பொலிஸ் சேவையின் நியமனம், இடமாற்றம் ஆகியன மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே பொலிஸ் ஆணைக்குழுவுக்கும், பொலிஸ்மா அதிபருக்குமிடையில் முரண்பாடுகள் ஏதும் கிடையாது.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் விசாரணை காரியாலயத்தின் பணிப்பாளராக செயற்பட்டேன். 1200 விசாரணை கோப்புக்கள் தயாரிக்கப்பட்டு அவற்றில் 500 கோப்புக்கள் இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவுக்கும், நிதி குற்றப் புலனாய்வு பிரிவுக்கும் மேலதிக விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டது. இருப்பினும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ‘டீல்’ செய்து விசாரணைகளை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள்.
பதவிக்கு வந்து 3 மாதங்களில் பல விடயங்களை செயற்படுத்தியுள்ளோம். சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட 660 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் வர்த்தகத்தின் ஊடாக திரட்டப்பட்ட 4,524 மில்லியன் ரூபா சொத்துக்களும், பிரமிட் முறைமை மோசடி ஊடாக திரட்டப்பட்ட 2,867 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும், போதைப் பொருள் வியாபாரத்தின் ஊடாக திரட்டப்பட்ட 1,504 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் நீதிமன்றத்தின் ஊடாக முடக்கப்பட்டுள்ளன.
அதேபோல் சட்டவிரோதமான முறையில் திரட்டப்பட்ட 152.8 மில்லியன் ரூபா அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2024.09.21ஆம் திகதிக்கு பின்னர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 680 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சைபர் நிதி முறைமை குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் 297 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 8 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் சர்வதேச சிவப்பு பிடியாணையுடன் கைது செய்யப்பட்டார்கள்.
பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment