சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 9, 2025

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

(நா.தனுஜா)

நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பகுதியளவு நீதித்துறைசார் அதிகாரிகள் சட்டத்தின் பிரகாரம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதுடன், அவை சில சந்தர்ப்பங்களில் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுநிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் அமையாது. எனவே குற்றவியல் விவகாரங்களில் சட்டமா அதிபரால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளடங்கலாக அரசியல் சார்ந்த தரப்புக்களால் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படக்கூடாது. மாறாக அவ்வாறு செய்வது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு மிகவும் அவசியமான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அநுர பி. மெத்தேகொட மற்றும் செயலாளர் சட்டத்தரணி சத்துர ஏ. கல்ஹென ஆகியோர் கையெழுத்திட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்திருக்கும் கடிதத்திலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பி 92/2009 ஆம் இலக்க வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள மூவரை அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு சட்டமா அதிபரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமைச்சரவை அமைச்சர்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தவிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகிறோம்.

சட்டமா அதிபர் ஒரு பொதுமக்கள் சார்ந்து இயங்குவதால், அவர் தனது தீர்மானங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். அதேபோன்று குற்றவியல் விவகாரங்களில் சட்டமா அதிபர் பகுதி நீதித்துறைசார் வகிபாகத்தைக் கொண்டிருப்பார்.

எனவே விசாரணை அதிகாரிகளால் தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவருக்கு எதிராகக் குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்வதா?, இல்லையா?, என்பது குறித்து சட்டமா அதிபரே தீர்மானிக்க வேண்டும்.

அத்தீர்மானத்தை மேற்கொள்ளும்போது அவர் குறித்த ஆவணங்கள் சட்டத்தினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவையா எனவும், அவை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கான நியாயப்பாட்டை வழங்குகின்றனவா எனவும் ஆராய வேண்டும்.

அதேவேளை சட்டமா அதிபரின் தீர்மானங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்த முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இருப்பினும் அத்தகைய மறுபரிசீலனையை ரிட் மனு அல்லது அடிப்படை உரிமை மீறல் ஒன்றின் ஊடாகவே கோரமுடியும்.

அதன்படி குறித்தவொரு சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கோ அல்லது விடுதலை செய்வதற்கோ மேற்கொள்ளப்படும் தீர்மானத்தை உயர் நீதிமன்றத்தினால் மாத்திரமே மறுபரிசீலனை செய்ய முடியும்.

இவ்வாறானதொரு பின்னணியில் குற்றவியல் விவகாரங்களில் சட்டமா அதிபரால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளடங்கலாக அரசியல் சார்ந்த தரப்புக்களால் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படக் கூடாது என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும்.

மாறாக அவ்வாறு செய்வது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு மிகவும் அவசியமான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் அமையும்.

பொதுக் கட்டமைப்பு ஒன்றினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தீர்மானம் தொடர்பிலும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படுவது ஜனநாயக சமுதாயத்துக்கு இன்றியமையாதது என்பதுடன், அதற்கு சமாந்தரமாக இக்கட்டமைப்புக்களின் சுயாதீனத்துவத்தைப் பாதுகாப்பதும் மிக அவசியமாகும்.

நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பகுதியளவு நீதித்துறைசார் அதிகாரிகள் சட்டத்தின் பிரகாரம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதுடன், அவை சில சந்தர்ப்பங்களில் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் அமையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

எனவே சட்டமா அதிபரின் அதிகாரங்கள் பயன்படுத்தப்படும்போது, அதில் அநாவசிய தலையீடுகள் மேற்கொள்ளப்படாமலிருப்பதை உறுதிப்படுத்துமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

அத்தோடு நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கு அவசியமான சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்துவத்தை நீங்கள் தொடர்ந்து உறுதி செய்வீர்கள் எனவும் நம்புகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment