சட்டமஅதிபருக்கு அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது : மக்களின் வெறுப்பு தீவிரமடையும்போது திசைதிருப்பும் அரசாங்கம் - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Saturday, February 8, 2025

சட்டமஅதிபருக்கு அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது : மக்களின் வெறுப்பு தீவிரமடையும்போது திசைதிருப்பும் அரசாங்கம் - உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் பழிவாங்களுக்காக அரசாங்கம் நீதிக் கட்டமைப்பையும் பயன்படுத்துகிறது. சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது. எதிர்வரும் காலங்களில் பலர் கைதாகலாம் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (08) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. அரசாங்கத்தின் மீது மக்களின் வெறுப்பு தீவிரமடையும்போது மக்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்காக கடந்த அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயங்களை அரசாங்கம் வெளியிடும்.

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றவர்கள், மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் விபரத்தை அரசாங்கம் வெளியிட்டது. தற்போது 2022 மே கலவரத்தின்போது வீடுகளை இழந்த அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்ட இழப்பீட்டுத் தொகை தொடர்பான விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்ட அரசாங்கம் அந்த நிதியை மீளப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

அதேபோல் கடந்த அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன. மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வியெழுப்பியபோது அந்த மதுபானசாலை பத்திரங்கள் சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் சட்ட சிக்கல் ஏற்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களையும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான கொடுப்பனவையும் இரத்துச் செய்வதாகவும் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது.

மக்களை தூண்டிவிடுவதற்காக குறிப்பிட்ட விடயங்களை சட்டத்துக்கு முரணாக செயற்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் தற்போது விளங்கிக் கொண்டுள்ளது.

அரசியல் பழிவாங்களுக்காக அரசாங்கம் நீதிக் கட்டமைப்பை பயன்படுத்திக் கொள்கிறது. அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றன. சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது. எதிர்வரும் காலப்பகுதியில் பலர் கைதாகலாம் என்றார்.

No comments:

Post a Comment