உண்மையை மறைக்கவே அரசாங்கம் குரங்கை குற்றம் சாட்டுகிறது - சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 11, 2025

உண்மையை மறைக்கவே அரசாங்கம் குரங்கை குற்றம் சாட்டுகிறது - சம்பிக்க ரணவக்க

(இராஜதுரை ஹஷான்)

மின் விநியோக கட்டமைப்பை கண்காணிப்பதற்கு பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளது. இந்த உண்மையை மறைப்பதற்காகவே அரசாங்கம் குரங்கை குற்றம் சாட்டுகிறது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மின் விநியோக துண்டிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை மின்சார சபையின் கட்டமைப்பு முகாமைத்துவம் அல்லது முறைமை கட்டுப்பாடு குரங்கு மோதி செயலிழக்கும் என்று குறிப்பிடுவது நகைச்சுவையானது.

குரங்கினால் தேங்காய் விலையேற்றம், நாய், பூனைகளுக்கு உணவளிப்பதால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டவர்கள். மின் விநியோக தட்டுப்பாட்டுக்கு குரங்கு மீது பழிசுமத்துவது ஆச்சரியத்துக்குரியதொரு விடயமல்ல. ஆனால் உண்மை இதுவல்ல.

பாணந்துறை பகுதியில் ஒரு பகுதியில் உள்ள மின் பிறப்பாக்கியில் குரங்கு மோதினால் அந்த பகுதிக்கு மாத்திரமே மின் விநியோகம் பாதிக்கப்படும். முழு இலங்கைக்குமான மின் கட்டமைப்புக்கு ஒருபோதும் பாதிப்பு ஏற்படாது.

மின் விநியோக கட்டமைப்பை கண்காணிப்பதற்கு பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளது. இந்த உண்மையை மறைப்பதற்காகவே அரசாங்கம் குரங்கை குற்றம் சாட்டுகிறது.

நாளாந்த மின்னுற்பத்தியை காட்டிலும் மின் பாவனைக்கான கேள்வி அதிகளவில் காணப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 70 சதவீத இயற்கை மின்னுற்பத்திக்கு செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் கிரீன் எனர்ஜி திட்டத்துக்கமைய சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி ஊடாக 2600 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் ஒன்றிணைக்க முடியும் என்று பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

ஆகவே இந்த அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் முறையாக செயற்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment