மத தலைவர்கள் சிறை சென்றுள்ளதை அருட்தந்தைக்கு நினைவுபடுத்துகிறேன் : அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் யார்? என கேள்வி எழுப்புகிறார் உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2025

மத தலைவர்கள் சிறை சென்றுள்ளதை அருட்தந்தைக்கு நினைவுபடுத்துகிறேன் : அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் யார்? என கேள்வி எழுப்புகிறார் உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

குண்டுத் தாக்குதலை புலனாய்வு பிரிவே நடத்தியது என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து கத்தோலிக்கர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அருட்தந்தை சிறில் காமினி முயற்சிக்கிறார். இன மற்றும் மத சகவாழ்வுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துரைத்த மத தலைவர்கள் கடந்த காலங்களில் சிறை சென்றுள்ளார்கள் என்பதை அருட்தந்தைக்கு நினைவுப்படுத்துகிறேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்தவுடன் உண்மையை நாட்டுக்கு பகிரங்கப்படுத்துவதாகவும் வாக்குறுதியளித்தே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தார்.

பயங்கரவாத செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வருவதற்கும், அவர் மீதான நான்கு முறைப்பாடுகளை நீக்கிக் கொள்வதற்கும் அரசாங்கம் அவருக்கு வாக்குறுதியளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கல், போலியான பெயரில் ஆள் மாறாட்டம் செய்து திருமணம் முடித்தல், 20 இலட்சம் ரூபா போலி கசோலை வழங்கல், சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பியோடல் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்கள் அசாத் மௌலானா மீது சுமத்தப்பட்டுள்ளது.

சுவிச்சர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் ஒரு சந்தேகநபராக கருதப்படும் அசாத் மௌலானாவை அரசாங்கம் தனது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது முறையற்றது. இதனையே நாங்கள் எதிர்க்கிறோம்.

அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் 8 கேள்விகளை கடந்த வாரம் முன்வைத்தேன்.

இந்த கேள்விகளுக்கு அரசாங்க தரப்பில் இருந்து அமைச்சரவை பேச்சாளர் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கொழும்பு மறைமாவட்ட பேராயர் இல்ல ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இந்த 8 கேள்விகளையும் மேற்கோட்காட்டி அடிப்படையற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஆகவே அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் யார்?

குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் நான் தலையீடு செய்வதாகவும், எதிர்க்கட்சிக்கான பொறுப்பை நான் நிறைவேற்றுமாறும் குறிப்பிடுகிறார்.

அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படும்போது அதனை சுட்டிக்காட்டி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது எதிர்க்கட்சியின் பொறுப்பு, ஆகவே எனது பொறுப்பை நான் முறையாக நிறைவேற்றுகிறேன்.

குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தேடுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிடுகிறார். ஆனால் 2024.09.17 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அருட்தந்தை சிறில் காமினி 'உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அபு ஹிந்த்' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதான சூத்திரதாரியை அறிவதாயின் மேடைகளில் குறிப்பிடாமல் பொலிஸாருக்கும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் குறிப்பிட வேண்டும்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய தகவல் அறிந்தும் அதனை மறைப்பது தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஒரு வழக்கு தொடர்பில் பொது இடங்களில் பேசுவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்பதை அருட்தந்தை சிறில் காமினிக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

தாம் நினைப்பது உண்மையாக வேண்டும் என்று கருதுபவர்கள்தான் பிரதான சூத்திரதாரி அபுஹிந், புலனாய்வு பிரிவின் பிரதானி பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு விசாரணைகளில் தலையிடுகிறார்கள்.

அருட்தந்தை சிறில் காமினி எவ்விதமான அடிப்படைகளுமில்லாமல் குண்டுத் தாக்குதலின் பொறுப்பை புலனாய்வு பிரிவின் மீது சுமத்த முயற்சிக்கிறார். இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

புலனாய்வு பிரிவில் பணி புரிபவர்களில் பெரும்பாலானோர் பௌத்தர்கள். ஊடகங்களுக்கு முன்பாக வந்து அடிப்படையற்ற வகையில் புலனாய்வு பிரிவுதான் குண்டுத் தாக்குதலை நடத்தியது என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவித்து கத்தோலிக்கர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அருட்தந்தை முயற்சிக்கிறார்.

கத்தோலிக்கர்களும், பௌத்தர்களும் இந்த நாட்டில் சகவாழ்வுடன் வாழ்கிறார்கள். இந்த சகவாழ்வை சீர்குலைக்கும் வகையில் செயற்படுவது பிணை வழங்க முடியாத பாரதூரமான குற்றமாக கருதப்படும்.

மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துரைத்த மத தலைவர்கள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்கள் என்பதை அருட்தந்தை சிறில் காமினிக்கு நினைவுப்படுத்திக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment