அரசாங்கம் ஒட்டு மொத்த உயிரினங்களையும் குற்றவாளியாக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2025

அரசாங்கம் ஒட்டு மொத்த உயிரினங்களையும் குற்றவாளியாக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது - உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் ஒட்டு மொத்த உயிரினங்களையும் குற்றவாளியாக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. குரங்கினால்தான் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது என்று மக்களை மூடர்களாக்கும் வகையில் பேசுவதை மின்சக்தி அமைச்சர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்துக்கும், உயிரினங்களுக்கும் ஏதும் முற்பகை உள்ளதா என்று தெரியவில்லை. வீட்டில் வளர்க்கும் பிரயாணிகளுக்கு உணவளிப்பதால்தான் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். காட்டு விலங்குகளால்தான் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிடுகிறார்.

வீடுகளில் தேங்காய் சம்பல் மற்றும் உணவுக்கு தேங்காய் பால் எடுப்பதால் சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் போலியான காரணிகளை மாத்திரமே குறிப்பிட்டுக் கொள்கிறது.

இந்த அரசாங்கம் பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் உயிரினங்களை குற்றவாளியாக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது.

மின் பிறப்பாக்கியில் குரங்கு மோதியதால் மின் விநியோகம் தடைபட்டது என்று மின்சாரத்துறை அமைச்சர் நேற்று குறிப்பிட்டார்.

தற்போது மின் விநியோக கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை சபை குறிப்பிட்டுள்ளது. ஆகவே மக்களை மூடர்களாக்கும் வகையில் கருத்துரைப்பதை அமைச்சர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment