புதிய மூலோபாய திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் : சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் - இலங்கை ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமருக்கிடையில் சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 11, 2025

புதிய மூலோபாய திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் : சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் - இலங்கை ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமருக்கிடையில் சந்திப்பு

2025ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (11) பல அரச தலைவர்களுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) இடம்பெற்றது.

இலங்கை அரசியலில் அரசாங்கத்தின் சிறப்பான வெற்றிக்காக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்துவது மற்றும் சந்தையை பல்வகைப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன், புதிய மூலோபாய திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடினர்.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமரிடம் விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போதைய அரசாங்கம் ஊழலற்ற, வெளிப்படையான பொருளாதார முகாமைத்துவத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். 

அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நல்லதொரு அடித்தளத்தை அமைக்கும் வகையில் செயற்பட முடியும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானுக்கும் - இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளார்.

No comments:

Post a Comment