போதைப் பொருள் கொள்வனவு செய்ய சித்தியின் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞனையும், திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 3 இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 03ஆம் திகதி 19 ½ பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில், முறைப்பாட்டாளரின் வீட்டில் வசித்து வந்த, முறைப்பாட்டாளரின் அக்காவின் மகனே திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், களவாடப்பட்ட நகையில் ஒரு தொகுதியும், ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 2 கிராம் 400 மில்லி கிராம் உயிர்க்கொல்லி போதைப் பொருளான ஹெரோயினையும் மீட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் திருட்டுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மேலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
திருட்டில் ஈடுபட்டவர்கள் , போதைக்கு அடிமையானவர்கள் எனவும் , போதைப்பொருட்களை கொள்வனவு செய்யவே திருட்டில் ஈடுபட்டதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ் . விசேட நிருபர்
No comments:
Post a Comment