(லியோ நிரோஷ தர்ஷன்)
தூய்மையான அரசியல் என்று கூறினாலும், அரசாங்கத்தின் செயல்களும் நடவடிக்கைகளும் தூய்மையானதாக இல்லை என்பது கொள்கலன் விடயத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி கட்டுப்பாடுகளை, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் இலங்கைக்கும் விதித்தால் அரசாங்கம் என்ன செய்யும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர்களுடனான சந்திப்பு கொழும்பு - 7 இல், அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்றபோதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில், மக்கள் நிதியை மோசடி செய்தவர்களை கைது செய்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை. ஆனால் அரசியல் பழிவாங்கல் நோக்குடன் அரசாங்கம் செயல்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது.
பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களின்போது அரசாங்கம் முன்வைத்த திட்டங்கள், வழங்கிய உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கான ஆரம்ப நிலை முன்னெடுப்புகள் காணப்படவில்லை.
தொலைநோக்குடன் சிந்திக்காது பொறுப்பற்ற வகையில் அரசாங்கம் செயல்படுவது நாட்டின் எதிர்காலத்திற்கு சிறப்பாக இருக்காது.
சீனாவுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி கட்டுப்பாடுகளை, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் இலங்கைக்கும் விதித்தால் அரசாங்கம் என்ன செய்யும். அவ்வாறானதொரு நிலை வந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் இன்னும் சிந்திக்க கூட இல்லை.
தூய்மையான அரசியல் என்று கூறினாலும், அரசாங்கத்தின் செயல்களும் நடவடிக்கைகளும் தூய்மையானதாக இல்லை. 300 க்கும் மேற்பட்ட கொள்கலன்களை அரசாங்கம் சட்டவிரோதமாக விடுவித்துள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் அரச தரப்பு வாயடைத்து போகிறது. எனவே கொள்கலன் விடயத்தில் சந்தேகங்கள் உள்ளன.
நாடு பொருளாதார ரீதியில் சவால்களை எதிர்கொள்கையில் இரண்டு ஆண்டுகள் கடுமையாக போராடி நிலைமையை சீராக்கினோம். அதன் பின்னர் பொருளாதார ரீதியிலான ஸ்திரதன்மையை நோக்கி நாட்டை கொண்டுசெல்ல செயல்பட்டோம். ஆனால் நாட்டில் இன்று ஸ்தீரதன்மை ஒன்று உள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும் .
வரவு செலவு திட்டத்தை அரசாங்கம் மார்ச் மாத்தில் நிறைவேற்ற உள்ளது. அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கைக்கு வரும். இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் வழிகாட்டல் வரவு செலவு திட்டத்தில் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை இதன்போது ஆராய்வார்கள்.
2024 ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்ட தொகையை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும். இந்த நிதியுடன் வரவு செலவு திட்டம் எவ்வாறு பயணிக்கும் என்பதை அவர்கள் தீவிரமாக ஆராய்வார்கள் என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment