(நா.தனுஜா)
இலங்கை அரசு 1951 ஆம் ஆண்டு அகதிகள் பிரகடனத்தில் கையெழுத்திடாத போதிலும், அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய அபாயம் உள்ள நாட்டுக்கு அவர்களை வலுகட்டாயமாகத் திருப்பி அனுப்பக்கூடாது எனும் சர்வதேச அடிப்படைச் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டியது அவசியமாகும். அதன்படி மியன்மாரில் இருந்து நாட்டை வந்தடைந்த அகதிகளை இலங்கை அரசாங்கம் மீண்டும் அந்நாட்டுக்கு திருப்பியனுப்பக்கூடாது என சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் மியன்மாரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதுடன், எஞ்சியோர் முல்லைத்தீவு விமானப் படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அகதிகள் தொடர்பில் மியன்மார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அவர்களை திருப்பியனுப்புவதற்கு உத்தேசித்திருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருப்பதாக வெள்ளிக்கிழமை (03) ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
அதுமாத்திரமன்றி நாட்டை வந்தடைந்த மியன்மார் அகதிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் அந்நாட்டு அரசாங்கத்திடம் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதுபற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனிடம் வினவியபோது, இலங்கை 1951 ஆம் ஆண்டு அகதிகள் பிரகடனத்தில் கைச்சாத்திடவில்லை எனக் குறிப்பிட்டார்.
இருப்பினும் அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய அபாயம் உள்ள நாட்டுக்கு அவர்களை கட்டாயமாக திருப்பி அனுப்பாதிருத்தல் என்பது சர்வதேச அடிப்படைச் சட்டங்களில் ஒன்றாக இருப்பதன் காரணமாக அதற்கு இலங்கை அரசு கட்டுப்பட வேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டினார்.
அச்சட்டத்தின் பிரகாரம் நாட்டை வந்தடைந்த அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் அவர்களது சொந்த நாட்டில் முகங்கொடுக்கக்கூடிய அச்சுறுத்தல், உயிராபத்து என்பன தொடர்பில் முறையாக மதிப்பீடு செய்யாமல், அவர்களை அந்நாட்டுக்கு திருப்பியனுப்பக்கூடாது எனவும், மாறாக அவ்வாறு திருப்பியனுப்புவது அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவே அமையும் எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.
அதேபோன்று இதுவரை காலமும் நாட்டை வந்தடையும் அகதிகளின் விபரங்களைத் திரட்டி, அவர்களது சொந்த நாட்டில் அவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் குறித்து மதிப்பீடு செய்து, அவர்களை அகதிகளை உள்ளீர்க்கும் ஏனைய நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டு வந்ததாக சுட்டிக்காட்டிய அம்பிகா சற்குணநாதன், இருப்பினும் நாட்டில் இயங்கி வந்த அம்முகவரகம் கடந்த ஆண்டுடன் மூடப்பட்டிருப்பதனால் தற்போது மியன்மார் அகதிகள் விவகாரத்தில் என்ன நேரும் எனக்கூற முடியவில்லை என்றார்.
அதேவேளை இதுபற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறியிடம் வினவியபோது, மேற்குறிப்பிட்ட செய்தி தொடர்பில் தாம் அறியவில்லை எனவும், அதுபற்றி ஆராய்ந்து ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்போம் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment