(எம்.வை.எம்.சியாம்)
சட்டம் என்பது கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தோ அல்லது சேற்றில் புதைக்கப்பட்ட குச்சியோ அல்ல. எனவே அரச திணைக்களங்களில் சேவையை பெற்றுக் கொள்ள வருகை தரும் ஒருவரை வெற்றுக்கையோடு மீள அனுப்பக்கூடாது. அதிகாரிகள் தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதியின் 'கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய வேலைத்திட்டத்துக்கு அமைய எமது அமைச்சின் பொறுப்புக்களை நாம் சரிவர நிறைவேற்ற உறுதி கொள்ள வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட ஏனைய அனைத்து துறைகளுக்கும் பொறுப்புக்கூறல் எமது அமைச்சின் ஊடாகவே இடம்பெறுகிறது. குறிப்பாக தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு அதற்கு சிறந்த உதாரணமாகும். அவை எந்த அளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம்.
அதேபோன்று நாட்டில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் அனைத்திற்கும் நாம் பொறுப்பானவர்கள். 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸாரை வழிநடத்தல் மற்றும் மேற்பார்வை செய்வது எமது அமைச்சாகும்.
ஜனாதிபதியின் 'கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பாரிய பொறுப்பு எமது அமைச்சுக்கு உள்ளது.
அதேபோன்று எமக்கு நிறைவேற்ற வேண்டிய சில பொறுப்புகள் உள்ளன. நாம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் இந்த நாட்டில் தீர்க்கப்படாமல் பல பிரச்சினைகள் இருந்தன. அதில் ஒன்று கடவுச்சீட்டு விநியோகம். எனினும் எமது அரசாங்கத்தில் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளோம். குறுகிய காலப்பகுதிக்குள் எமக்கு அதற்கான நடவடிக்கையை எடுக்க முடிந்தது. ஆனால் அது போதுமானதல்ல என்பதை நாம் அறிவோம்.
நாட்டில் சட்டம் உள்ளது. திணைக்களங்களை பொருத்தமட்டில் அதில் ஒரு பகுதி காணப்படுகிறது. அங்கு அதிகாரங்கள் திணைக்களங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தை மறந்து விட வேண்டாம். எமது நாட்டில் மிக நீண்ட தூரத்தில் உள்ளவர்களே அதனை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருகின்றனர்.
யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, கதிர்காமம், மொனாரகலையிலிருந்து வருகை தந்த ஒருவரை வெற்றுக்கையோடு மீள அனுப்புவதா? அல்லது தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நியாயத்தை பெற்றுக் கொடுப்பதா என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.
சட்டம் என்பது கல்லில் செதுக்கப்பட்ட எழுத்தோ அல்லது சேற்றில் புதைக்கப்பட்ட குச்சியோ அல்ல. எனவே அரச திணைக்களங்களில் சேவையை பெற்றுக் கொள்ள வரும் ஒருவரின் தேவை பூர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அதன் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றார்.
No comments:
Post a Comment