நீதிமன்ற தீர்ப்புக்கமைய சிறையில் இருக்க வேண்டியவர்கள் வைத்தியசாலையில் இருக்க முடியாது - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல - News View

About Us

About Us

Breaking

Sunday, January 12, 2025

நீதிமன்ற தீர்ப்புக்கமைய சிறையில் இருக்க வேண்டியவர்கள் வைத்தியசாலையில் இருக்க முடியாது - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

(இராஜதுரை ஹஷான்)

சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படுவார்கள். எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது. நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் சிறைச்சாலையில் இருக்க வேண்டும். அதனை விடுத்து சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டு சுகபோகமாக இருக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம் தொடர்பில் மாறுபட்ட பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு தரப்பினர் தங்களின் அரசியல் இலாபத்துக்காக இந்த திட்டத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய இந்த செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுகிறது. எதிர்க்கட்சியினர் அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் நாடு என்ற ரீதியில் புதிய பரிமாணத்தை நோக்கி பயணிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பாராளுமன்றத்தை சிரமதானம் செய்துகொடுக்குமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தோம். மக்களும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்தி எமக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள். ஆகவே மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கமைவாகவே செயற்படுவோம்.

அரசியலமைப்பின் 12(1) பிரிவின் பிரகாரம் சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் நீதிமன்றத்துக்கு நடந்து செல்லும் அரசியல்வாதி நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் சிறையில் இருக்க வேண்டும் அதனை விடுத்து வைத்தியசாலைகளில் சுகபோகமாக இருக்க முடியாது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபர் அரசியல் அணுசரணையுடன் வைத்தியசாலையில் இருப்பதாக கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்டது. சட்டத்தின் முன் அனைத்து பிரஜைகளும் சமமாக மதிக்கப்படுவார்கள். எவருக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட மாட்டாது.

ஒரு சில கைதிகள் பல மாதகாலமாக வைத்தியசாலையில் இருப்பது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment