உலகிலேயே அதிக இலாபம் ஈட்டும் வர்த்தகமாகவும் கடத்தல் தொழிலாகவும் மருந்துத்துறை மாறியுள்ளது - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

உலகிலேயே அதிக இலாபம் ஈட்டும் வர்த்தகமாகவும் கடத்தல் தொழிலாகவும் மருந்துத்துறை மாறியுள்ளது - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

(செ.சுபதர்ஷனி)

உலகிலேயே அதிக இலாபம் ஈட்டும் வர்த்தகமாகவும் கடத்தல் தொழிலாகவும் மாறியுள்ள மருந்துத்துறையில் நிலவி வரும் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதுடன் அவற்றை சீர்செய்ய முன்னின்று உழைக்கும் அனைத்து ஊழியர்களையும் பலப்படுத்தவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் அரசாங்கம் நிச்சயமாக முன்நிற்கும். கடத்தல்காரர்கள் மற்றும் அவ்வாறான குழுக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு சுகாதார அமைச்சோ அரசாங்கமோ ஒருபோதும் செயல்படாது என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, திங்கட்கிழமை (06) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களின் பாதுகாப்பு, தரம் மற்றும் அவற்றின் செயல்திறன் தொடர்பில் தரநிலைகளை உறுதி செய்வதன் மூலம் சுகாதாரத் துறையை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் தனது முதன்மையான பங்களிப்பை வழங்கி வருகிறது.

மருந்துப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறனை உறுதிபடுத்துவதற்கான தர நிர்ணயத்தை கண்காணிப்பு மற்றும் சான்றுகளின் ஊடாக வழங்கி வருகிறது.

இந்நாட்டு மருந்து கொள்ளையை வெளிப்படுத்துவதற்காக மருந்து நிறுவனங்களுடன் அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியாக போராடிய பேராசிரியர் சேனக பிபில இறுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த தருணத்தில் அவரது வீரச்செயலை நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன். அவ்வாறு இதுவரை கொலைகள் ஏதும் நடைபெறவில்லை.

எனினும் கடத்தல்காரர்கள் வேறு நுணுக்கமான செயன்முறைகளை கையாண்டு தமது இலட்சியங்களை அடைவதற்காகவே செயல்படுகின்றனர். ஆகையால் அரசாங்கத்தின் திட்டத்தை சீர்குலைக்க முயல்பவர்கள் தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

உலகிலேயே அதிக இலாபம் ஈட்டும் வர்த்தகமாகவும் கடத்தல் தொழிலாகவும் மாறியுள்ள மருந்துத் துறையில் நிலவி வரும் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதுடன் அவற்றை சீர்செய்ய முன்னின்று உழைக்கும் அனைத்து ஊழியர்களையும் பலப்படுத்தவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் அரசாங்கம் நிச்சயமாக முன்நிற்கும்.

கடத்தல் காரர்கள் மற்றும் அவ்வாறான குழுக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு சுகாதார அமைச்சோ அரசாங்கமோ ஒருபோதும் செயல்படாது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தொடர்பான செய்திகள் கடத்தலின் நீட்சியாகவே வெளிவருகின்றன.

மருந்துகளின் தரம், நிலை மற்றும் விலை என அனைத்து நடவடிக்கைகளிலும் எவ்வாறான சிக்கல் தோன்றி இருப்பினும் அதை இந்நிறுவாக குழுவினரே பொறுப்பேற்க வேண்டும். ஆகையால் அனைவரும் தமது பொறுப்பை உணர்ந்து பணியாற்றுவது அவசியம்.

அரசியல்வாதிகள் தமது ஆசனங்களை தக்க வைத்துக் கொள்ள சுய விருப்பின் பெயரில் செயற்பட புதிய அரசாங்கத்தால் ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது. அடுத்த ஐந்தாண்டுகளில் தேசியத் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள், இலக்குகள் மற்றும் தூரநோக்குடன் சுகாதார சேவையின் பல முக்கிய துறைகளை வழிநடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment