அரசாங்கம் வாக்குறுதியிலிருந்து பின்வாங்கினால் இலங்கை மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் - விசனம் வெளியிட்டுள்ள அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

அரசாங்கம் வாக்குறுதியிலிருந்து பின்வாங்கினால் இலங்கை மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் - விசனம் வெளியிட்டுள்ள அலி சப்ரி

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான உள்ளகப் பொறிமுறையொன்றை நிறுவுவதாக தமது அரசாங்கம் வாக்குறுதியளித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எனவே தற்போதைய அரசாங்கம் அவ்வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் பட்சத்தில் இலங்கை அரசாங்கம் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் என விசனம் வெளியிட்டார்.

நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூல வரைபைத் தயாரிப்பதற்குமென கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகமொன்று நிறுவப்பட்டு இயங்கி வந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை அடுத்து, அந்த இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் புதிய அரசாங்கத்தினால் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டன.

அதேவேளை அந்த இடைக்கால செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட சட்ட வரைபு மற்றும் அதனுடன் தொடர்புடைய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தாம் பணிகளை ஆரம்பித்து சொற்ப காலமே பூர்த்தியடைந்திருப்பதாகவும், எனவே இவ்விடயம் தொடர்பில் உரிய கோப்புகளை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அதுபற்றி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்குரிய பணிகளை முனைப்புடன் முன்னெடுத்து வந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் இதுபற்றி வினவியபோது, பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களுக்குரிய பதிலோ அல்லது நீதியோ இன்றிக் காத்திருப்பதாகவும், எனவே அவர்களுக்கான தீர்வை வழங்குவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயன்முறையொன்று இயங்க வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று இதுவொரு அரசியல் சார்ந்த விடயமல்ல எனக் குறிப்பிட்ட அவர், ஆகவே உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை இலக்காகக் கொண்டு கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான உள்ளகப் பொறிமுறையொன்றை நிறுவுவதாக தமது அரசாங்கம் வாக்குறுதியளித்திருப்பதாக சுட்டிக்காட்டிய அலி சப்ரி, எனவே தற்போதைய அரசாங்கம் அவ்வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் பட்சத்தில் இலங்கை அரசாங்கம் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment