(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சியின் பிளவால் நாம் தற்போது எதிர்கொண்டுள்ள நிலைமையை 2020ஆம் ஆண்டிலேயே கணித்தோம். அதன் காரணமாக அன்றிலிருந்தே மீண்டும் இணைந்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தோம். ஐக்கிய தேசிய கட்சியை மீளக் கட்டியெழுப்பினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
கொழும்பு - பிளவர் வீதியில் தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைவு குறித்து 2020 ஆம் ஆண்டு சப்டெம்பர் மாதத்திலிருந்தே நாம் கலந்துரையாடியிருக்கின்றோம்.
அப்போது நான் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தேன். பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கபீர் ஹசீம் ஆகியோரை அழைத்துவந்து கலந்துரையாடியிருக்கின்றேன்.
இன்று இவ்விரு கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அன்றே நாம் உணர்ந்தோம். இந்த அபாயத்தை உணர்ந்ததன் காரணமாகவே இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தினோம்.
அன்று ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருந்ததால்தான் நாம் இவ்வாறான கோரிக்கையை முன்வைப்பதாக பெரும்பாலானோர் குறிப்பிட்டனர். ஆனால் இன்று என்னவாகியிருக்கிறது?
கட்சிகள் இரண்டாக இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியினரே இரு தரப்பிலும் இருக்கின்றனர். இதற்காக நானும் பிரதித் தலைவரும் அர்ப்பணிப்புடன் முயற்சித்து வருகின்றோம். அதற்கமைய பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்திருக்கின்றோம்.
எவ்வாறிருப்பினும் எம்மால் இதனை தனித்து செய்ய முடியாது. கீழ் மட்டத்திலிருந்து சகலரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
யானை சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெற்றி பெற்றிருக்கின்றார். அவராகவே கோரிக்கையை முன்வைத்து யானை சின்னத்தில் போட்டியிட்டார். எனவே இதனை மீளக் கட்டியெழுப்பினால் நிச்சயம் எம்மால் வெற்றி பெற முடியும். இது யதார்த்தமாகும். ஐக்கிய தேசிய கட்சியின் பிளவில் நானும் தவறிழைத்தவளாகவே உணர்கின்றேன். அன்று அனைவரும் இணைந்து எடுத்த தீர்மானத்துக்கு நாம் இணக்கம் தெரிவித்தோம்.
இந்த அரசாங்கத்தைப் பற்றி இனியும் பேசி பயன் இல்லை. கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு ஆண்டுகளின் பின்னர்தான் நெருக்கடிகளை ஏற்படுத்தினார். கொவிட் தொற்றுக்கு மத்தியிலேயே அவ்வாறான நிலைமை ஏற்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் செழிப்பாக உருவெடுத்துக் கொண்டிருந்த நாட்டை சீரழிக்கத் தொடங்கியுள்ளது. ஓரிரு மாதங்களிலேயே இவர்களது வீழ்ச்சி வெளிப்பட ஆரம்பித்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment