(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் மற்றும் பதவி நிலைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பங்காளி கட்சித் தலைவர்கள் முன்வைத்த யோசனைகளை கருத்திற் கொண்டு கட்சியை மறுசீரமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசிம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரை உள்ளடக்கிய வகையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கட்சி மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வெகுவிரைவில் முன்வைக்குமாறு இந்த குழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளது. இந்த குழு எதிர்வரும் வாரமளவில் கூடவுள்ளதாக அறிய முடிகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது வழமைக்கு மாறாக செயற்குழு உறுப்பினர்களுக்கு கூட்டத்தின்போது பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஒழுங்கு பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி வைத்த 12 விடயங்கள் உள்ளடங்கிய கடிதம் குறித்து கலந்துரையாடப்படுவதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்துக்கு சஜித் பிரேமதாச பதிலளிப்பதை தாமதப்படுத்துவதற்கு செயற்குழுவின் முன்னிலை உறுப்பினர்கள் எதிரப்பு தெரிவித்துள்ளனர்.
செயற்குழு கூட்டத்தின்போது இம்தியாஸ் பாக்கீர் மாக்கரின் 12 யோசனைகள் உள்ளடங்கிய கடிதம் பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மாறாக கூட்டுறவு தேர்தல் உட்பட பிற விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளன.
இதன்போது எழுந்து கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இந்த சந்தர்ப்பத்தில் நகைச்சுவை பேசிக்கொண்டு தற்காலிக தீர்மானத்தை எடுக்க முடியாது. தொடர்ந்து தோல்வியடைய முடியாது. கட்சிக்கு வாக்களித்த மக்களுக்காக எமக்கு பொறுப்புள்ளது. அத்துடன் எதிர்க்கட்சி என்ற ரீதியிலும் எமக்கு பொறுப்புள்ளது. நகைச்சுவைக்கு பதிலாக கட்சியை மறுசீரமைக்கும் விடயங்கள் பற்றி பேசுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மரிக்காரின் கருத்துக்கு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குறிப்பிடுவது உண்மை, மறுசீரமைப்பு என்பது வெற்றிக்காக செய்ய வேண்டியது. இதனை தாமதப்படுத்துவது ஒரு தரப்பினரது செயற்பாடு. தலைவர் உட்பட அனைவரும் தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்லாவிடின் அது தோல்விக்கு காரணமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைப்பதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தற்காலிக தீர்மானங்களை மாத்திரமே முன்வைத்தார். இதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினோம். இங்கும் அந்த தன்மையே காணப்படுமாயின் முன்னேற்றமடைய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் முன்வைத்த யோசனைகள் பெறுமதியானது. இருப்பினும் அனைத்துக்கு முன்னரும் கடிதம் ஊடகங்களுக்கு சென்றுவிட்டது. என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அக்கணமே எதிர்ப்பு தெரிவித்துள்ள இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், அந்த கடிதத்தை உங்களுக்கும், கட்சியின் பொதுச் செயலாளருக்கும், தேசிய அமைப்பாளருக்கும் மாத்திரமே அனுப்பி வைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
செயற்குழு கூட்டத்தில் முன்வைத்த யோசனைகளை கருத்திற் கொண்டு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியை மறுசீரமைப்பதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் தலைமைத்துவத்தில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகியோரை உள்ளடக்கிய வகையில் குழுவினை நியமித்துள்ளார்.
No comments:
Post a Comment