(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உலக வரைபடத்தில் இன்றும் லயன் அறையில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் வாழும் சமூகமாகவே எம்மலையக மக்கள் உள்ளார்கள். பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மலையக மக்களின் வாழ்க்கையை இந்த அரசாங்கம் அபிவிருத்தி செய்தால் அரசு வரலாற்றில் இடம்பிடிக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்துக்காக நண்பர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம்.
மலையக மக்களின் வாழ்க்கை என்றும் பாதிக்கப்பட்டதொன்றதாக காணப்படுகிறது. உலக வரைபடத்தில் இன்றும் லயன் அறைகளில் வாழும் மக்கள் சமூகமாகவே எம் மலையக சகோதரர்கள் உள்ளார்கள்.
100 - 200 மீற்றர் லயன் அறை தொகுதியில் தார் பூசிய தகர கூரைகளினால் அமைக்கப்பட்ட அறைகளில்தான் இன்றும் எம்மலையக மக்கள் வாழ்கிறார்கள். பலர் உரிய அடிப்படை வசதிகளுமில்லாத வகையில் வாழ்கிறார்கள்.
சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இந்த மக்களுக்கு தரமான சொந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தால் இந்த அரசாங்கம் வரலாற்றில் இடம் பிடிக்கும். இந்த மக்களுக்காக எடுக்கும் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.
No comments:
Post a Comment