(செ.சுபதர்ஷனி)
சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவில் பரவி வரும் Human Meta Pneumo Virus (HMPV) வைரஸ் தொற்று குறித்து சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்படி புதிய வகை வைரஸ் தொற்று பரவல் குறித்து வெள்ளிக்கிழமை (3) சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்திருந்த விசேட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்படி வைரஸ் தொற்றுக் குறித்து தற்போது சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது தொடர்பில் உரிய பகுப்பாய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிட தயாராக உள்ளோம்.
ஆகையால் பொதுமக்கள் வீன் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு கோவிட்-19 தொற்று ஏற்பட்டதன் பின்னர் சுமார் ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீனாவின் பல பகுதிகளில் புதிய வகை வைரஸ் இனம் பரவி வருவதை காணக்கூடியதாக உள்ளது.
”Human Meta Pneumo Virus (HMPV) என குறித்த வைரஸ் தொற்று சீன ஆய்வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி வைரஸ் தொற்றுடன் மேலும் பல வைரஸ் தொற்றுக்களும் அப்பகுதிகளில் பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதுடன் அவை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே சீனாவில் பரவி வந்த கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு முழு உலக நாடுகளும் முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகியிருந்தது.
தற்போது சீனாவில் பரவி வரும் Human Meta Pneumo Virus (HMPV) தொற்றுக்கு ஆளானவர்களில், ஏற்கனவே கோவிட்-19 தொற்றுக்கு ஆளான நபர்களும் உள்ளடங்குவதாக அந்நாட்டு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இந்நாட்களில் இன்புளுவென்சா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 தொற்றாளர்களும் வைத்தியசாலைகளில் நிரம்பி வழிவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெகுவாக பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
எவ்வாறெனினும் அந்நாட்டு அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment