ஜனவரி 09 வரவு செலவுத் திட்டம் : 26 நாட்கள் இடம்பெறவுள்ள விவாதம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2025

ஜனவரி 09 வரவு செலவுத் திட்டம் : 26 நாட்கள் இடம்பெறவுள்ள விவாதம்

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை (வரவு செலவுத் திட்ட விவாதம்) 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று (31) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இணங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கிட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. 

இதற்கு அமைய 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவு செலவுத் திட்ட உரை) பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி இடம்பெறவிருப்பதுடன், இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி வரை 7 நாட்கள் இடம்பெறவுள்ளன. 

அத்துடன் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன. 

இதற்கான வாக்கெடுப்பை மார்ச் மாதம் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நடத்துவதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.

வரவு செலவுத் திட்ட காலப்பகுதியில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரையான நேரம் 5 வாய் மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரையான காலப்பகுதியில் வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும். 

வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்களான பெப்ரவரி மாதம் 25 மற்றும் மார்ச் மாதம் 21ஆம் திகதிகள் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரையான காலப்பகுதி சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment