விவசாய மற்றும் கைத்தொழில் துறையில் இளம் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான சலுகைக் கடன் திட்ட முறைமையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 13 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக சலுகை அடிப்படையிலான நிதி வசதிகள் இன்மையால் விவசாயத்துறையில் தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு தடைகள் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலைமை விவசாயத் துறையில் இளைய தொழில்முயற்சியாளர்களின் கவர்ச்சி குறைந்துள்ளதுடன், தரிசு நிலங்களின் அளவு அதிகரிப்பதற்கும், உணவு உற்பத்தி குறைந்து செல்வதற்கும் காரணமாக அமைகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் 2025 வரவு செலவு திட்ட முன்மொழிவின் பிரகாரம் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறையில் ஈடுபடுகின்ற தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்வதற்கான சலுகைக் கடன் திட்ட முறைமையை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ. 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கருத்திட்டம் 05 வருட காலத்துக்கு நடைமுறைப்படுத்துவதுடன், பயனாளி ஒருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ. 5 மில்லியன் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த சலுகைக் கடன் திட்ட முறையின் கீழ் பயனாளிகளிடம் அறவிட வேண்டிய வட்டி, எஞ்சியுள்ள கடன் தொகைக்கு வருடாந்தம் 4% வீதமாகும்.
அதற்கமைய 05 வருடங்களில் விவசாய தொழில் முயற்சியாளர்கள் 50,000 பேரை உருவாக்குகின்ற அரசின் நோக்கத்தை அடைவதற்கு இயலுமாகும் வகையில் சலுகைக் கடன்திட்ட முறைமையை இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment