காணிகளை விடுவிப்பதற்கான கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க முடியுமா ? - சிறீதரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 15, 2024

காணிகளை விடுவிப்பதற்கான கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க முடியுமா ? - சிறீதரன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணிகளை விடுவிப்பதற்கான கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க முடியுமா என்று இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இங்கு உரையாற்றிய சிறிதரன் மேலும் தெரிவிக்கையில், “யாழ். மாவட்டத்தில் இராணுவ பிடியில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு கால எல்லையை நிர்ணயிக்க முடியுமா?

ஒரு கால எல்லையை நிர்ணயித்து செயல்படும்போதுதான் அதற்கான வேலைத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில் காணி விடுவிப்பு வெகு விரைவாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் எத்தனை? அவை தொடர்பில் முழுமையான விபரங்களை தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வீடமைப்பு அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்ட வீடுகள் இன்னும் முடிவடையாத அத்திவாரம் இடப்பட்டு சில வீடுகளும், சுவர்கள் அரைகுறையாக இன்னும் சில வீடுகளுமாக முற்றுப் பெறாமல் இருக்கின்றன.

அவை ஒருபுறம் இருக்க வேறு நிறுவனங்களால் வேறு சில திட்டங்கள் ஊடாக வீடமைப்பு வருகின்றபோது தேசிய வீடமைப்பு அதிகார சபையால் உள்வாங்கப்பட்டவர்களுக்கு அந்த வீடுகளை முடிவுறுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

இதனால் அந்த திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு வீடுகள் பூர்த்தியடையாமல் இருப்பதுடன் அவர்கள் அந்த வீட்டை முழுமைப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் முழுமையான விபரங்களை பெற்று திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள்.

மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு ஒரு கால எல்லையை நிர்ணயம் செய்து காணிகளை விடுவிப்பதன் மூலம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சிவஞானம் சிறிதரன் மேலும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் இன்னமும் 2 ஆயிரத்து 624.29 ஏக்கர் காணிகள் விடுவிக்க வேண்டியுள்ளதாக அரசாங்க அதிபர் ம.பிரதிபன் தெரிவித்தார்.

இதேவேளை கடற்தொழில் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், காணிகள் அடுத்த வருடம் முதல் காலகிரமத்தில் விடுவிக்கப்படும். கால எல்லை என்று கூற முடியாவிட்டாலும் அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதேவேளை வீடமைப்பு திட்டங்கள் தெடர்பான விடயங்கள் அரசாங்க அதிபர் ஊடாக சமர்பிக்கப்படும் என வீடமைப்பு அதிகார சபை அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment