மீண்டும் வர்த்தமானியை வெளியிடுங்கள், இல்லையேல் சந்தையில் நெருக்கடி ஏற்படும் - ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 10, 2024

மீண்டும் வர்த்தமானியை வெளியிடுங்கள், இல்லையேல் சந்தையில் நெருக்கடி ஏற்படும் - ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, அரிசி உற்பத்தியாளர்களுக்கு மாத்திரம் மொத்த விலையை நிர்ணயித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும். இல்லையேல் சந்தையில் மீண்டும் நெருக்கடி ஏற்படும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அரிசியின் மொத்த மற்றும் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மொத்த மற்றும் சில்லறை விலை நிர்ணயம் பிரச்சினைக்குரியதாக உள்ளது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ள நிலையில் எடுக்கப்படும் தீர்மானங்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் ஒரு சில அரச அதிகாரிகள் செயற்படுவது அவதானத்துக்குரியது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி சிக்களுக்குரியதாக காணப்படுகிறது. 225 ரூபா மொத்த விலைக்கு அரிசியை கொள்வனவு செய்வதற்கும், அவற்றை 225 ரூபாவுக்கு விற்பனை செய்யவும் வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்மானத்தினால் மொத்த வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும்.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் திங்கட்கிழமை (09) நுகர்வோர் அதிகார சபையுடன் கலந்துரையாடினோம். அரிசிக்கான விலை தொடர்பில் எமது தரப்பு நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம். இருப்பினும் நுகர்வோர் அதிகார சபை முரண்பட்ட வகையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

மொத்த மற்றும் சில்லறை விலை என்ற அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுவதை போன்று அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரிசிக்கும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ஆகவே வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்று திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம் என்றார்.

No comments:

Post a Comment