தாதியர் பயிற்சிக் கல்லூரி புத்தர் சிலை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது - கருணாகரம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2024

தாதியர் பயிற்சிக் கல்லூரி புத்தர் சிலை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது - கருணாகரம்

மட்டு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிவுப்பட்டது வட, கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது. எனவே மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னால் புத்தர் சிலை நிறுவப்பட்டமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்னால் புத்தர் சிலையொன்று திடீரென்று நிறுவப்பட்டுள்ளது. தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் பௌத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர். 

அந்த வகையில் வைத்தியசாலை நிருவாகத்திற்கு தெரியாமல் அவர்களது அனுமதியைப் பெறாமல் ஒரு புத்தர் சிலையை வைத்திருப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத கண்டனத்துக்குரிய நிகழ்வாகப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

இந்த நாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பௌத்த மயமாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது. 

அந்த வகையில் கடந்த அரசாங்கத்தில் கூட வட மாகாணத்தின் சுகாதாரப் பணிப்பாளராக ஒரு சிங்களவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்ட பொழுது அவர், யாழ்ப்பாண வீதிகளில், சுற்றுவட்டங்களில் புத்தருடைய சிலையை நிறுவியதன் காரணமாக ஏற்பட்ட எதிர்ப்பின் பிரகாரம் உடனடியாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படடதாக அறிந்திருக்கிறேன்.

அந்த வகையில் புதிதாக இந்த நாட்டில் உருவாகியிருக்கின்ற அரசாங்கம் சாதி, மத, இன பேதமற்ற ஒரு இலங்கையை உருவாக்க வேண்டும் என்ற கோசத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றார்கள். 

இவர்களும் தொடர்ச்சியாக இப்படி தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்களா அல்லது அரசாங்கத்திற்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற தோரணையில் இந்த தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் அவர்கள் செயற்படுகின்றாரா என்ற கேள்விக்குறி எங்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

எது எவ்வாறாயினும் வட, கிழக்குப் பிரதேசம் என்பது தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் கணிசமாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலைக்குள் அனுமதியின்றி ஒரு புத்தர் சிலையை நிறுவியிருப்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

வைத்தியசாலை நிருவாகம் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு அங்கிருக்கும் பதற்ற நிலைமையை தவிர்ப்பது மாத்திரமல்லாமல் இந்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக கூடுதலான கரிசனையை எடுத்து அங்கு ஏற்படவிருக்கும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். 

இல்லாவிட்டால் தொடர்ச்சியாக இப்படியான சம்பவங்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறுவதற்கு ஏதுவாக அமைந்துவிடும்.

எனவே இந்த மக்கள் மீது அக்கறை கொண்டு மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் மாத்திரமல்ல மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் பணிபுரியும் ஏனையோரினதும் தமிழர்களினதும் ஆதங்கமாக இது பார்க்கப்படுகிறது.

எனவே உடனடியாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையினை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அவர்களை வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment