மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, தாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பிரதேச செயலகத்தின் முன்பாக உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (23) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 20ஆம் திகதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் கிராம உத்தியோகத்தர் கடமை நிமித்தம் தனது பிரதேசத்துக்குச் சென்று வரும்போது சிலரால் தாக்கப்பட்டார்.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை.
இந்த தாக்குதலை கண்டித்தும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்தின் முன்பாக ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேண்டும், வேண்டும் நீதி வேண்டும்', 'தாக்காதே தாக்காதே அரச ஊழியர்களைத் தாக்காதே', 'கைது செய் கைது செய் குற்றவாளிகளைக் கைது செய்', 'அரச உத்தியோகத்தரின் பாதுகாப்பை உறுதி செய்', 'கடமையை செய்தால் உயிருக்கு அச்சுறுத்தலா', 'அரச பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு எப்போது தீர்வு' என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதையடுத்து, போராட்ட களத்துக்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
அத்தோடு, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை போராட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்தனர்.
மகஜரைப் பெற்றுக் கொண்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குற்றவாளிகளை கைது செய்வதில் அயராது முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகவும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இரவு பகலாக பொலிஸ் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் சரணடையாமல் தலைமறைவாகியுள்ளதுடன், விரைவில் அவர்களை கைது செய்வேன் என்றும் தெரிவித்தார்.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வாக்குறுதியையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றனர்.
அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான அரச சேவையை மேற்கொள்ளும்போது ஒரு சிலரால் தாக்கப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தங்களது சேவையை திறன்பட மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டடோர் தெரிவித்தனர்.
குற்றவாளிகள் இன்றுடன் 4 நாட்கள் கடந்தும் கைது செய்யப்படவில்லை. அவர்களை விரைவில் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தனர்.
கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமைன்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராம சேவகர் வெளிக்களக்கடமை நிமித்தம் அலுவலகம் திரும்பும் வழியில் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
க.ருத்திரன்
No comments:
Post a Comment