(எம்.மனோசித்ரா)
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கமும், மின்சார சபையும் இணைந்து செயற்பட்டு மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நிவாரணத்தைத் தடுத்துள்ளன. மக்களை ஏமாற்றாமல் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலங்களில் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் இரண்டு மடங்கால் குறைப்பதாகக் கூறியது.
மின்சார சட்டத்துக்கமைய இவ்வாண்டிறுதியில் மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொண்டிருக்க வேண்டும்.
எவ்வாறிருப்பினும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டாம் என அரசாங்கத்தினால் மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கமும் மின்சார சபையும் இணைந்து செயற்பட்டு மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நிவாரணத்தைத் தடுத்துள்ளன.
தேர்தல் காலங்களில் இவர்கள் கூறியதற்கு புறம்பாக தற்போது மூன்று ஆண்டுகளின் பின்னரே மின் கட்டணத்தில் திருத்தங்கள் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மக்களை ஏமாற்றாமல் மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
அதேபோன்று ஓய்வு பெற்றவர்களின் சேமிப்பு பணத்துக்கு அதிக வட்டி வழங்குவதாகவும் தேர்தல் காலங்களில் வாக்குறுதியளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வட்டியும் குறைக்கப்பட்டுள்ளதாகவே தெரியவருகிறது. அது மாத்திரமின்றி சேமிப்புக்கான வருட வட்டியில் 10 சதவீதம் அரசாங்கத்தால் அறவிடப்படுகிறது. இது அநீதியாகும்.
தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இது பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் ஓரிரு அரசியல்வாதிகளின் தலையீட்டுடன் வழங்கப்பட்டவை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டதே தவிர, ஏனையவை தொடர்பில் எந்த தகவலும் இல்லை.
அதேவேளை சட்டத்துக்கு முரணாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யுமாறும் வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.
No comments:
Post a Comment