யாழ். போதனா வைத்தியசாலையில் முறைகேடாக நடந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறையிட்டுள்ளார்.
இதுபற்றித் தெரிய வருவதாவது, பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு நேற்று காலை 10. 30 மணியளவில் சென்றிருந்தார். இதன்போது அங்கு கடமையிலிருந்த பொலிஸ் மற்றும் பாதுகாப்பு ஊழியரை அச்சுறுத்தி வைத்தியசாலைக்குள் பிரவேசிக்கவும் அவர் முயன்றார். இதனால், அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில், தமக்கு விசேட சிறப்புரிமை இருப்பதாகக் கூறிய ராமநாதன் அர்ச்சுனா எம்.பி, முறைகேடான முறையில் வைத்தியசாலைக்குள் பிரவேசித்தார். பின்னர், கடமையிலிருந்த பொலிஸ் மற்றும் பாதுகாப்பு ஊழியரை அவர், அச்சுறுதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்குள்ள சிறப்புரிமையின் அடிப்படையில் வைத்தியசாலைக்கு வந்ததாகவும், எவரையும் சந்திக்கும் உரிமை தமக்கு இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். இதனால், அங்கு பலத்த வாக்குவாதமும் ஏற்பட்டது.
எனினும், வைத்தியசாலை என்பதால், முன்கூட்டிய அனுமதியின் அடிப்படையிலே எவரையும் சந்திக்க முடியுமென பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ்வாறு நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்தே யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டபோதும், அவரைத் தொடர்புகொள்ள முடியாமற் போனதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment