(எம்.வை.எம்.சியாம்)
தமது கல்வித் தகைமை தொடர்பான ஆவணங்களை உறுதிப்படுத்த முடியாமையால் ஒழுக்கமான முறையில் சபாநாயகர் பதவி விலகியுள்ளார். இந்த நாட்டில் இதற்கு முன்னர் இவ்வாறான முன்மாதிரியான அரசியல் கலாசாரம் இருக்கவில்லை. தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள மக்களாணையின் அர்த்தம் தொடர்பிலான ஆழமான சிந்தனை எமக்குள்ளது. எனவே அதற்கேற்ப அரசாங்கம் செயற்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
களுத்துறை வர்த்தக சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, வரலாற்றில் முதல் தடவையாக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய ஜனாதிபதி ஒருவரையும் புதிய அரசாங்கத்தையும் தெரிவு செய்திருந்தனர்.
பொதுத் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் அதிக படியான ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலையகம் என அனைத்து மக்களினதும் ஆதரவுடன் எம்மால் அந்த வெற்றியைப் பெற முடிந்தது.
எமக்கு கிடைத்த அந்த மக்களாணையில் பல எதிர்பார்ப்புகள் உள்ளன என்பதை நாம் நன்கறிவோம். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட முழு அரசாங்கமும் மக்கள் ஆணையின் நோக்கத்தை பற்றிய புரிதல் மற்றும் பொறுப்புக் கூறலை உணர்ந்துள்ளது.
அதேபோன்று எமக்கு மக்கள் அதிகாரத்தை வழங்கியதும் புதிய மாற்றத்துக்காகும். எனவே அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது முதன்மை நோக்கமாகும்.
எமது பொருளாதார கொள்கைகள் தொடர்பில் நாம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி இருந்தோம். வீழ்ந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு மேம்படுத்த போகிறது என்ற சந்தேகம் மக்களிடத்தில் இருந்தது. அந்த சந்தேகம் சாதாரணமானாதாகும்.
ஜனாதிபதி பதவியேற்று இரண்டரை மாதங்கள் ஆகியுள்ளது. அதேபோன்று அமைச்சரவையை நியமித்து மூன்று வாரங்கள் கடந்துள்ளன. இந்த குறுகிய காலப்பகுதிக்குள் புதிய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முகாமைத்துவம் செய்கிறது என்பதை உங்களால் அவதானிக்க முடியும்.
பங்குச் சந்தையின் வளர்ச்சி வீதம் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் வரி வருமானம் அதிகரித்துள்ளது. அதேபோன்று தேசிய உற்பத்தியை 15 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். கலால் திணைக்களத்தின் ஊடாக 200 பில்லியன் ரூபா வருமானத்தை உழைத்துள்ளோம். மறைமுக வரி மற்றும் உழைக்கும் போதும் அறவிடும் வரிகளை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவற்றின் ஊடாக அரச வருமானத்தை அதிகரிப்பது எமது இலக்காகும். இது சிரமமான பணியாகும். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். அவற்றை முகாமைத்துவம் செய்து கொண்டே எமது பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் நாட்டை மேம்படுத்தவும் தரமான அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கவுமே எமக்கு மக்களாணை கிடைத்துள்ளது.
எமது கொள்ளைகளில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது. இதன் காரணமாகவே சபாநாயகர் தமது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
எதிர்காலத்தில் அவரது கல்வித் தகைமை தொடர்பான ஆவணங்களை முன்வைப்பார். தமது தகைமைகள் குறித்து ஆவணங்களை தற்போது அவரால் முன்வைக்க முடியாமையால் ஒழுக்கமான முறையில் பதவி விலகியுள்ளார்.
இதனை விட இந்த நாட்டில் பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதற்கு முன்னர் இவ்வாறான முன்மாதிரியான அரசியல் கலாசாரம் இருக்கவில்லை.
தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள மக்களாணையின் அர்த்தம் தொடர்பிலான ஆழமான சிந்தனை எமக்குள்ளது. எனவே அதற்கேற்ப நாம் செயற்படுவோம் என்றார்
No comments:
Post a Comment