2024 பாராளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் அதாவது இன்று (2024.11.11) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களின் அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் முடிவுறுத்தப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (11) நடைபெறும் இறுதி அரசியல் பிரச்சாரக் கூட்டங்களின் வீடியோ காட்சிகளையும் விபரங்களையும் நாளை (12) ஒவ்வோரு தொலைக்காட்சி/வானொலி அலைவரிசையின் ஒரு பிரதான செய்தியறிக்கையில் மாத்திரம் பிரசாரம் செய்வதற்கும், நாளை (12) வெளியாகும் செய்தித்தாள்களில் புகைப்படங்களையும் கூட்டங்கள் பற்றிய குறிப்புகளையும் வெளியிடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் அலைவரிசையோடும் செய்தித்தாளோடும் இணைந்த சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய அனைத்து சமூக ஊடக தளங்களின் நிருவாகிகளுக்கும் இந்த நிபந்தனைகள் ஏற்புடைத்தாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த இறுதிப் பிரச்சாரக் கூட்டங்கள் பற்றிய விபரங்களை பிரசித்தப்படுத்தும்போது அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒத்த சந்தர்ப்பம் கிடைக்கின்ற விதத்தில் செய்தித்தாள்களில் இடமொதுக்கிக் கொடுப்பதுடன், அலைவரிகளிலும் வானலைக் காலம் ஒதுக்கிக் கொடுக்கப்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை (12) அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் அந்நாளுக்குரிய செய்தித்தாள் தலைப்புக்களை முன்வைக்கும்போது நாழிதழ்களின் செய்தித் தலைப்பை மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டுமென்பதுடன், செய்தி சார்ந்த வேறெந்தக் கருத்து யோசனை அல்லது செய்திக்கு மாற்றமான கருத்து வெளிப்பாடொன்றை அதனைச் சமர்ப்பிக்கும் ஊடகவியலாளர்கள் முன்வைக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2024.11.13,14 ஆம் திகதிகளில் செய்தித் தலைப்புக்களை முன்வைக்கும்போது அல்லது வேறு வகையில் எந்தவோர் அரசியல் பிரசார செய்தியையும் கட்சியை/வேட்பாளரை ஊக்குவிக்கும் அல்லது பாதிப்புக்கு உள்ளாக்கும் விதத்திலான சமர்ப்பிப்புகளை முன்வைக்காமல் இருக்குமாறு அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக அலைவரிசைகளின் தலைவர்களுக்கும் செய்திப் பிரிவுகளின் தலைவர்களுக்கும் செய்தி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பீட பணிப்பாளர்களுக்கும் தலைமைப் பதிப்பாசிரியர்களுக்கும் அனைத்து சமூக ஊடக உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்று நடாத்தப்படுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு அறிவித்தல் கொடுக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் தொடர்பான பின்வரும் விடயங்களுக்கு ஏற்பிசைவு தெரிவிப்பதன் மூலம் உதவுமாறு அனைத்து வேட்பாளர்கள், வாக்கெடுப்பு முகவர்கள், அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், பெரும்பாக முகவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment