முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வாகனங்களை ஒப்படைக்குமாறு பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 19, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வாகனங்களை ஒப்படைக்குமாறு பணிப்பு

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி தங்காலையில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளதால், அவர் கொழும்பு வந்த பின்னர் வாகனங்கள் கையளிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தொடர்பான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்திடம் வினவியபோது, மஹிந்த ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களால் பயன்படுத்தப்பட்ட சில வாகனங்களை ஒப்படைக்குமாறு அரசாங்கம் கடிதம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தலைவர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை யோசிக்காமல் இவ்வாறு செயற்படுவது தவறு என சாகர காரியவச குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் வெளியாகும் முன்னரே இவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்வது பலரிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment