சமூக வலைத்தள கருத்துக்கணிப்பில் ஈடுபடுவது சட்டவிரோதம் : அவதானம் செலுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Monday, September 2, 2024

சமூக வலைத்தள கருத்துக்கணிப்பில் ஈடுபடுவது சட்டவிரோதம் : அவதானம் செலுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதை ஒத்திகை பார்த்து அதனை காணொளியாக பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ள தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் குறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக கருத்து கணிப்புக்களை மேற்கொள்ளும் தரப்பினர் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒருசில வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தேர்தல் சட்டத்துக்கு முரணாகவே செயற்படுகிறார்கள். தமது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தேர்தல் சட்டத்தை மீறும் ஆதரவாளர்களின் செயற்பாட்டுக்கு குறித்த வேட்பாளர் பொறுப்புக்கூற வேண்டும்.

தேர்தல் சட்டத்தை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே தேர்தல் சட்டத்துக்கு அமைய சகல வேட்பாளர்களும் செயற்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

ஒருசில ஊடகங்கள் இன்றும் குறிப்பிட்ட ஒருசில வேட்பாளர்களுக்காகவே செயற்படுகின்றன. ஊடகங்களில் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் காலவகாசம் குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அன்றாடம் எமக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறது. அதில் ஒருசில இலத்திரனியல் ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்படுகிறது.

ஒருசில அச்சு ஊடகங்களும் குறிப்பிட்ட ஒருசில வேட்பாளர்களுக்கு சார்பாக செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. இயலுமான வரை சகல வேட்பாளர்களுக்கும் முன்னுரிமை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எமது அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காத ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment