எதிர்காலத்தில் அரச சொத்துக்கள் உள்ளடக்கிய முதலீட்டு நிறுவனமொன்று நிறுவப்படும் : மக்கள் பொறுத்துக் கொண்டிருக்காவிட்டால் நாடு இன்று பங்களாதேஷாக மாறியிருக்கும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, September 2, 2024

எதிர்காலத்தில் அரச சொத்துக்கள் உள்ளடக்கிய முதலீட்டு நிறுவனமொன்று நிறுவப்படும் : மக்கள் பொறுத்துக் கொண்டிருக்காவிட்டால் நாடு இன்று பங்களாதேஷாக மாறியிருக்கும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் அரச சொத்துக்களை உள்ளடக்கி புதிய முதலீட்டு நிறுவனம் ஒன்று எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் அதற்காக புதிய சட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதன் ஊடாக சொத்துக்களை உருவாக்கும் புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும் முறையான ஓய்வூதிய திட்டமிடல் முறையை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சனச அமைப்பின் ஊடாக முதியோர்களுக்கான புதிய ஓய்வூதியக் காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (02) முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அடையாளரீதியில் முதியோர் காப்புறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து ஸ்திரமற்ற நிலையில் இருந்த வேளையில் தான் நாட்டைப் பொறுப்பேற்று கடினமாக முடிவுகளை எடுத்து நாட்டை மீட்டதாக கூறிய ஜனாதிபதி, மக்கள் பொறுமையாக செயற்பட்டிருக்காவிட்டால் இன்று பங்களாதேஷைப்போன்று எமது நாடும் மாறியிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது, 1977 இல் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை திறந்து விட்டது. அதன்படி, புதிய நிறுவனங்கள் மற்றும் புதிய வணிகங்களை உருவாக்க ஒவ்வொரு குழுவும் முன்வந்தன. அன்றைய தினம் சனச இயக்கத்தை ஆரம்பிக்க பி.ஏ.கிரிவந்தெனிய முன்வந்தார். அதன்படி, இந்தத் திட்டத்தை சட்டபூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் உற்பத்தி மற்றும் விநியோகம் பிரிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை 1962 இல் டட்லி சேனாநாயக்க மற்றும் ஜே. ஆர். ஜயவர்தன ஆகியோரால் கொண்டு வரப்பட்டன . உரிமைகளைப் பகிர்ந்தளிப்பதற்கான முன்மொழிவாக இது அரசியலமைப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, சனச இயக்கங்கள் போன்ற அமைப்புகள் ஊக்குவிக்கப்பட்டன. இது இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

20 ஆம் நூற்றாண்டை விட 21 ஆம் நூற்றாண்டில் மாற்றம் ஏற்பட்டது. சிறு தொழில்கள் உருவாகி பொருளாதாரம் விரிவடைந்தது. முச்சக்கரவண்டித் தொழில் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய சிறு வணிகம் வேகமாக முன்னேறியது. ஆனால் 2022 இல் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாடு ஸ்திரமற்ற நிலையில் இருந்த நேரத்தில் நான் நாட்டைப் பொறுப்பேற்றேன். அன்று மக்கள் பொறுமை காக்கவில்லை என்றால் இன்று இந்த நாட்டில் பெரும் அராஜகக நிலை உருவாகியிருக்கும்.

மக்கள் வீதியில் இருந்து கொண்டு நாட்டை நிர்வகிக்க முயன்றால் இன்று பங்களாதேஷுக்கு நேர்ந்த கதி இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் கடினமான மற்றும் பிரபலமற்ற முடிவுகளை எடுக்க நேரிட்டது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வாகனம், வீடு, நவீன மின்சாதனங்கள் வாங்குவது மக்களின் கனவாக இருந்தது. நாம் கடினமான காலத்தை கடந்துவிட்டோம். பொருளாதாரம் தற்போது ஸ்தீர நிலையை அடைந்துள்ளதால், மக்களின் கொள்வனவு செய்யும் சக்தியும் அதிகரித்துள்ளது.

மக்களுக்கு காணி உரித்து வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்நாட்டு மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, இருபது இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் இதன் மூலம் வழங்கப்படுகின்றன.

கொழும்பு நகர அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு அவர்களின் வீட்டின் உரிமைகளை வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்தோம். மலையக மக்களுக்கான தோட்ட கிராமங்களை உருவாக்கி ஒரு குடும்பத்திற்கு ஏழு பேர்சஸ் காணியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொறிமுறையின் படி மக்களுக்கு “உரிமைகள்” வழங்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

மேலும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலகு வட்டியில் வீட்டுக்கடன் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஊழியர் சேம நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றின் நிதி, பிணைமுறிப் பத்திரங்களை வாங்க பயன்படுத்தப்பட்டது. இப்போது நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின்படி அரச செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

அரச வருமானத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வருமானம் அதிகரிக்கும் போது, ​​பிணைமுறிப் பத்திரங்களை வாங்க ஊழியர் சேம நிதியத்தின் பணம் தேவையில்லை. அந்த நிதியை முதலீட்டுக்கு பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது. இது குறித்து தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுடன் கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் அரசாங்க சொத்துக்களிலிருந்து முதலீட்டு நிறுவனம் ஒன்றை (National Wealth Fund) நிறுவவும் எதிர்பார்க்கப்படுகிறது. நோர்வே, கட்டார், சிங்கப்பூர் போன்ற நாடுகளும் அரச வருமானத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்தை நலன்புரிப் பணிகளுக்காகப் பயன்படுத்த இவ்வாறானதொரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. அதன் மூலம் மக்களின் “உரிமை” பாதுகாக்கப்படும்.

இவ்வாறானதொரு சமூக முதலீட்டுத் திட்டத்தை இந்த சனச இயக்கமும் செய்து வருகின்றது என்பதைக் கூற வேண்டும். இந்த வகையான சமூக முதலீட்டு முறை பல்வேறு சேவை கூட்டுறவு சங்கங்களால் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு புதிய சட்டங்கள் கொண்டு வருவது அவசியமாக உள்ளதுடன், டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் ஆராய்ந்து அந்த சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் முதலீடுகள் அல்லது ஓய்வூதிய திட்டங்களையும் முன்னெடுக்கலாம்.

புதிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் பிரவேசிக்கும் இளம் தொழில்முனைவோருக்கு ஒரு தனியான சனச இயக்கத்தை உருவாக்க வேண்டும். விவசாயத் துறையையும், மீன்பிடித் துறையையும் நவீனமயமாக்குவதன் மூலம் பொருளாதாரத்தை திறம்பட மேம்படுத்த முடியும். அதற்கெல்லாம் முன்மாதிரியாக சனச கட்டமைப்பு இருந்தது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். சனச சங்கங்கள் மழைக்குப் பிடிக்கும் குடையைப் போன்றது. தலைக்கு மேல் உள்ள கூரை போன்றது. இதன் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க எதிர்பார்க்கிறேன்.

இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, சனச ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஐவன் நிகலஸ் மற்றும் சனச இயக்கத்தின் அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment