புதிய ஜனாதிபதி பொறுப்பை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் : ரணிலுக்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்கிறார் வஜிர - News View

About Us

About Us

Breaking

Thursday, September 26, 2024

புதிய ஜனாதிபதி பொறுப்பை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் : ரணிலுக்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்கிறார் வஜிர

(எம்.ஆர்.எம்.வசீம்)

வங்குராேத்து அடைந்த நாட்டை ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மீட்டு தற்போது அந்த பொறுப்பை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கையளித்திருக்கிறார். புதிய ஜனாதிபதி அந்த பொறுப்பை நிறைவேற்றுவார் என நாங்கள் நம்புகிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட மக்கள் வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு எமது கட்சி சார்ப்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோன்று நாட்டில் 42 வீதத்துக்கும் அதிகமான மக்கள் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சாட்டி இருக்கும் பொறுப்பை அல்லது அவரால் முன்வைக்கப்பட்டிருந்த தேர்தல் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களை செயற்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

குறிப்பாக சொல்லப்பட்ட விடயங்களை செயற்படுத்துவதை மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

மேலும் இலங்கையின் ஒட்டு மொத்த மக்களுக்கும் இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அல்லது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தபோது இலங்கையை ஸ்திரப்படுத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தேவையான சூழலை ரணில் விக்ரமிங்கவினாலே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அதற்காக இலங்கை மக்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

மேலும் ரணில் விக்ரமசிங்க நாட்டை முன்னேற்றுவதற்கு முன்னெடுத்துச் சென்ற வேலைத்திட்டம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய சங்கங்களுக்கிடையில் இடம்பெறும் உலகில் நன்கொடை வழங்கும் குழுக்களுடன் கலந்துரையாடி வங்குராேத்து அடைந்த நாட்டை, வங்குராேத்து நிலையில் இருந்து விடுவித்து, அவர் தயார் செய்துகொண்டு சென்ற வேலைத்திட்டங்களைவிட, இலங்கை மக்கள் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

அப்படியானால் அந்த பொறுப்பை இலங்கை மக்கள் ஏற்றுக் காெண்டுள்ளனர். இலங்கை மக்கள் பொறுப்பெடுத்திருக்கும் அந்த பொறுப்பு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். அதனால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஒன்று ஏற்படாமல் இருப்பதற்கு அந்த பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டி இருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment