நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், இன்று (22) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தன்னுடைய கட்சிக் கொடியையும், கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.
நடிகர் விஜய் நீலாங்கரையில் அமைந்திருக்கும் அவருடைய இல்லத்தில் இருந்து பனையூருக்குச் சென்றார். அவருடைய அம்மா ஷோபா, அப்பா சந்திரசேகர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்திருந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் நடிகர் விஜய்க்கு தங்களின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் நடிகர் விஜய் துவங்கி வைத்தார். கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பு அக்கட்சியினர் அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர்.
சிவப்பு, மஞ்சள் நிறப் பின்னணியில் போர் யானைகள் இடம்பெற்றுள்ள வகையில் அக்கட்சியின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பெப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அக்கட்சியைப் பதிவு செய்தார்.
இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார்.
No comments:
Post a Comment